மேட்டூர் நீர்மட்டம் 100 அடியை எட்டியது: காவிரி ஆற்றில் மலர் தூவி பூஜை

மேட்டூர் நீர்மட்டம் 100 அடியை எட்டியது: காவிரி ஆற்றில் மலர் தூவி பூஜை
Updated on
1 min read

மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது. கர்நாடகத்தில் இருந்து பெருக்கெடுத்துவரும் நீரால், ஓரிரு நாட்களில் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகத்தில் இருந்து பெருக்கெடுத்துவரும் வெள்ளத்தால், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, மேட்டூர் அணைக்கு வெள்ளிக்கிழமை அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 97.17 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 41 ஆயிரத்து 806 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 800 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

ஒகேனக்கல்லுக்கு வரும் 85 ஆயிரம் கன அடி தண்ணீரில் 80 ஆயிரம் கன அடி தண்ணீர் மேட்டூர் அணையை நோக்கி வந்தது. இதனால், மேட்டூர் அணை நீர்மட்டம் வெள்ளிக் கிழமை மாலை 100 அடியை எட்டியது. தொடர்ந்து, நீர்வரத்து அதிகரிப்பதால் காரணமாக அணையில் தண்ணீர் பரந்து விரிந்து கடல் போல காட்சியளிக்கிறது.

மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியதை அடுத்து, சேலம் ஆட்சியர் க.மகரபூஷணம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் காவிரி ஆற்றில் மலர் தூவி, பூஜைகள் நடத்தினர். ஆற்றில் கரைபுரண்டு வரும் தண்ணீரைக் கண்டு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தண்ணீர் வரத்து அதிகரிப்பால், விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்க வேண்டும் என்று ஆற்றில் சிறப்புப் பூஜைகளை நடத்தி வணங்கினர். காவிரி டெல்டா பாசனத்துக்காக வரும் 15-ம் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தொட்டதும் சேலம் மாவட்ட ஆட்சியர் மகரபூஷணம் தலைமையில் அதிகாரிகள், காவிரி தாய்க்கு பூஜை செய்தனர். அடுத்த படம்: 16 கண் மதகு பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in