Published : 17 Oct 2018 08:45 AM
Last Updated : 17 Oct 2018 08:45 AM

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று நடை திறப்பு; பத்தனம்திட்டாவில் பதற்றம்: தேவசம் போர்டு சமரச பேச்சுவார்த்தை தோல்வி

சபரிமலையில் அனைத்து வயது பெண் களையும் அனுமதிக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக போராட்டங்கள் தீவிர மடைந்து வருகின்றன. எதிர்ப்பாளர் களுடன் தேவசம் போர்டு நேற்று நடத்திய சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

பரபரப்பான சூழ்நிலையில் வழக்கமான மாதாந்திர பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. சபரிமலையை உள்ளடக்கிய பத்தனம் திட்டா மாவட்டத்தில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல தடை இருந்து வந்தது. இதற்கு எதிராக இளம் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக் கில் உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 28-ம் தேதி தீர்ப்பளித்தது. இதில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க உத்தர விட்டது. இந்த தீர்ப்பு ஐயப்ப பக்தர் களிடம் கடும் கொந்தளிப்பை உருவாக் கியது.

சீராய்வு மனு

சபரிமலையோடு நெருங்கிய தொடர் புடைய பந்தளம் அரச குடும்பத்தினர், சபரிமலை தந்திரி குடும்பத்தினர் உள் ளிட்ட பலரும் கடும் அதிருப்தி அடைந்தனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தும் கேரள அரசைக் கண்டித்து பாஜகவோடு கைகோத்து பல்வேறு இந்து அமைப்புகளும் போராட்டக்களத்தில் குதித்தன. போராட்டங்கள் ஒருபுறம் இருக்க தீர்ப்பினை எதிர்த்து நாயர் சர்வீஸ் சொசைட்டி (என்எஸ்எஸ்), தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் உள்பட 24 அமைப்புகளின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதில் சபரிமலை வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அது ஏற்கப்படாமல் வழக்கமான முறையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. அதன்படி சீராய்வு மனு விசாரணைக்கு வரும் முன்பே ஐப்பசி மாத நடைதிறப்பு காலம் வந்து விட்டது.

தீர்ப்புக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், இன்று நடை திறக்க உள்ளதால் சபரிமலையை உள்ளடக்கிய பத்தனம்திட்டா மாவட்டம் முழுவதுமே பதற்றமாக உள்ளது. குறிப்பாக நிலக்கல், பம்பையில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது. பாஜக சார்பில் பந்தளத்தில் இருந்து திருவனந்தபுரம் தலைமை செயலகம் வரை பேரணி நடத்தப்பட்டது. மாநில பாஜக தலைவர் தரன் பிள்ளை கூறியபோது, "24 மணி நேரத்துக்குள் ஆளும் இடதுசாரி அரசு தீர்வு காணாவிட்டால் பெரும் போராட்டம் நடத்தப்படும்" என எச்சரித்துள்ளார். ஆனால் கேரள அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் உறுதியுடன் இருக்கிறது.

முதல்வர் எச்சரிக்கை

திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் பினராயி விஜயன் கூறும்போது, "கேரள அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத் தும். நிலக்கல்லில் பெண் பத்திரிகை யாளர்களை இறங்கச் சொல்லி திருப்பி அனுப்பியுள்ளனர். சட்டத்தை யாரும் கையில் எடுக்க விடமாட்டோம். சடங்கு, மரபுகள் குறித்து ஆழ்ந்த புரிதல் உள்ள ஒரு குழு அமைத்து இந்த தீர்ப்பு அமல் படுத்தப்படும். சபரிமலைக்கு வரும் பெண் களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்”என்றார்.

சபரிமலை நடை இன்று திறக்கப் படும் நிலையில் எதிர்ப்புக் குரல் கொடுப்பவர்களோடு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தது திருவிதாங்கூர் தேவசம் போர்டு. திருவனந்தபுரம் நந்தன்கோட்டில் நடந்த இந்த கூட்டத்துக்கு தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் தந்திரிகளின் குடும்பத்தினர், ஐயப்ப சேவா சங்கம், யோக சேம சபா, பந்தளம் ராஜ குடும்பத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது தேவசம்போர்டு சார்பில் உடனே சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என அனைவரும் ஒருசேர வலி யுறுத்தினர். வரும் 19-ம் தேதி தேவசம் போர்டு ’கமிட்டி கூட்டம்’ கூடுகிறது. அதில் சீராய்வு மனு குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதுவரை சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கக் கூடாது என கோரிக்கை வைக்க, 19-ம் தேதி நடக்க இருக்கும் கூட்டத்தில்தான் முடிவு எடுக்கப்படும் என்று தேவசம் போர்டு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இதனால் எந்த முடிவும் எட்டப்படாமல் தந்திரி மற்றும் ராஜ குடும்பத்தினர் வெளிநடப்பு செய்தனர்.

அவசரச் சட்டம் கோரும் காங். எம்பி

உச்ச நீதிமன்ற தீர்ப்பைக் கண்டித்து காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் மகளிரணி சார்பில் போராட்டம் நடந்தது. இதில் சபரிமலையை உள்ளடக்கிய பத்தனம் திட்டா தொகுதியின் எம்பி ஆன்டோ ஆண் டனி பேசும்போது, "சபரிமலை ஐயப் பன் நைஷ்டிக பிரம்மச்சாரி. அதனால் இங்கு அனைத்து வயதுடைய பெண் களும் வருவதை அனுமதிக்க முடியாது. தமிழகத்தில் ஐல்லிக்கட்டுக்கு செய்தது போல் அவசர சட்டம் கொண்டு வந்து அனைத்து பெண்களையும் அனுமதிப் பதை தடை செய்ய வேண்டும் எனக் கேட்டு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி னேன். ஆனால் அதற்கு உரிய பதில் வரவில்லை” என்றார்.

நிலக்கல்லில் தடுத்து நிறுத்தம்

சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படும் நிலையில் 10 முதல் 50 வயதுடைய பெண்கள் கோயிலுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது என நேற்று மாலையே ஐயப்ப பக்தர்கள் நிலக்கல்லில் முகாமிட்டனர். அவர்கள் கார், வேன், அரசுப் பேருந்து என அனைத்தையும் தடுத்து நிறுத்தினர். அதில் இளவயதுடைய பெண்கள் இருந்தால் நிலக்கல் தாண்டி அனுமதிக்கவில்லை. பலரையும் திருப்பி அனுப்பினர். சபரிமலை நடை திறப்பு, பெண்கள் அனுமதி தொடர்பான செய்தி சேகரிக்க வந்த 'டைம்ஸ் நவ்' உள்ளிட்ட ஆங்கில ஊடகங்களின் பெண் நிருபர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர். பத்தனம்திட்டா, நிலக்கல், பம்பை ஆகிய பகுதிகளில் சபரிமலை பாதுகாப்பு இயக்க பெண்களும் ஐயப்ப பக்தர் களும் இதுபோன்ற செயல்களில் ஈடு பட்டனர்.

இத்தகைய சம்பவங்களைத் தொடர்ந்து சபரிமலைக்கு வரும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பம்பை, நிலக்கல்லில் 2 பட்டாலியன் பெண் காவலர்களை நிறுத்தி உள்ளது கேரள அரசு.

இன்று உச்சகட்ட போராட்டம்?

இதுநாள் வரை சபரிமலை தீர்ப்புக்கு எதிராக பல பகுதிகளிலும் தனித்தனியாக போராட்டம் நடத்தியவர்கள் இன்று மொத்தமாக பம்பை, நிலக்கல்லில் வந்து போராட்டம் நடத்தலாம் என கேரள அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சபரிமலை தந்திரியாக இருந்த கண்டரரு மகேஸ்வரருவின் பேரன் ராகுல் ஈஸ்வர், ரெடி டூ வெயிட் அமைப்பின் நிர்வாகி பத்மா ஆகியோர் இன்று போராட்டம் நடத்த உள்ளதாக ஏற்கெனவே அறிவித்துள்ளனர். சிவசேனா அமைப்பினர் சபரிமலையில் பெண் களை அனுமதித்தால் குழுவாக தற் கொலை செய்து கொள்வோம் என அறிவித்திருந்தனர். பாஜக கட்சி யும் இன்று முக்கிய போராட்டங்களை நடத்த உள்ளதாகத் தெரிகிறது.

இதனிடையில் இன்றும் நாளை யும் முழு அடைப்பு போராட்டம் நடத்த விஷ்வ இந்து பரிஷத் முன்னாள் தலைவர் பிரவீண் தொகாடியா ஆதரவு கேட்டு அறிக்கை விட்டுள்ளார்.

இதனிடையே சபரிமலைக்கு மாலை போட்டு விரதம் தொடங்கிய கண்ணூரைச் சேர்ந்த பெண் பக்தை ரேஷ்மா நிஷாந்த்துக்கு சிலர் மிரட்டல் விடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தன்னை வீட்டுக்கே வந்து சிலர் மிரட்டுவதாக தெரிவித்துள்ளார்.

பரபரப்பான சூழ்நிலையில் சபரி மலையில் இன்று மாலை கோயில் நடை திறக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x