Published : 08 Oct 2018 11:39 AM
Last Updated : 08 Oct 2018 11:39 AM

பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி டெல்லியில் சந்திப்பு: தமிழகத்துக்கு நிதி உதவி கோரி மனு

பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்தார். அப்போது, தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை வழங்கக் கோரி மனுவையும் அளித்தார். மேலும் தமிழக அரசியல் விவகாரங்கள் தொடர்பாக ஆலோனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2014-15 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதற்காக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள தோப்பூர் தேர்வு செய்யப் பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு மத்திய அரசு இன்னும் நிதி ஒதுக்கவில்லை. மேலும், தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக் கான மத்திய அரசின் நிதி அதிக அளவில் நிலுவையில் உள்ளது. தமிழக அனல்மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக முதல்வர் கே.பழனிசாமி நேற்று மாலை 6.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரும் சென்றுள்ளார். டெல்லியில் முதல்வரை தமிழக எம்.பி.க்கள், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியை முதல்வர் பழனிசாமி இன்று காலை சந்தித்தார். அப்போது கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய மத்திய அரசு நிதி, எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பான கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது. மேலும் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் பிரதமருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசித்தாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x