Last Updated : 21 Oct, 2018 07:28 PM

 

Published : 21 Oct 2018 07:28 PM
Last Updated : 21 Oct 2018 07:28 PM

‘பாஜகவை வீழத்துவது இலக்கு; காங்கிரஸ் கட்சியால் சுயமாக ஆட்சிக்கு வருவது கடினம்’: மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் பகீர் கருத்து

இப்போதுள்ள சூழலில் காங்கிரஸ் கட்சியால் பொதுத்தேர்தலில் சுயமாக வென்று, ஆட்சிக்கு வருவது கடினம், பாஜகவை வீழ்த்தக் கூட்டணி என்பது அவசியமானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் பகீர் பேட்டி அளித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் பிடிஐ நிறுவனத்துக்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

இன்றுள்ள சூழலில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் மத்தியில் ஆட்சி மாற்றம் தேவை, பாஜவை கண்டிப்பாகத் துரத்த வேண்டும் என்ற விஷயத்தில் தெளிவாக இருக்கிறார்கள். தியாகம், ஒத்துழைப்பு, கூட்டணி உருவாக விட்டுக்கொடுத்தல் என்று நீங்கள் இதை எப்படிவேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் காங்கிரஸ் கட்சி தயாராக இருக்கிறது.

எதிர்க்கட்சிகள் அமைக்கும் கூட்டணி காங்கிரஸ் கட்சிக்காக கண்டிப்பாக இல்லாமல், மத்தியில் பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

இன்றுள்ள சூழலில் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சுயமாக வென்று ஆட்சியைப் பிடிப்பது என்பது கடினமான ஒன்று அதை ஒப்புக்கொள்கிறோம். அதுதான் எங்கள் நோக்கமாக இருந்திருந்தால், கடந்த 5 ஆண்டுகளாக அதை நோக்கிப் பணியாற்றி இருப்போம். ஆனால், கடந்த 3 ஆண்டுகளாகக் கூட்டணிக்காக உழைத்துவிட்டு, திடீரென சுயமாக வெற்றி பெறுவோம் என்று எப்படிக்கூறுவது. கடந்த 5ஆண்டுகளாகப் போராடி இருக்கிறீர்கள், கூட்டணி வைப்போம் என்று கூறியிருக்கிறீர்கள், ஆதலால், எங்கள் கூட்டணி சிறப்பான வெற்றியைப் பெற உழைப்போம்.

எங்களுடைய மகாகூட்டணியின் நோக்கம், மோடி அரசைத் தோற்கடிப்பதுதான். அந்த நோக்கத்தை மறந்து எதிர்க்கட்சிகள் செயல்பட்டால், நிச்சயமாக நாம் நினைத்த இலக்கை அடைய முடியாது. அதன்பின் ஒவ்வொருவருக்கான இழப்பாகவும், நாட்டுக்கான இழப்பாகவும் அமையும்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கூறுவது எல்லாம் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்துத்தான். சட்டப்பேரவைத் தேர்தலுக்கும், மக்களவைத் தேர்தலுக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தவுடன், மக்களின் மனநிலை எவ்வாறு இருக்கிறது, மகா கூட்டணி சாத்தியமாகுமா என்பது தெரியவரும்.

மகா கூட்டணி அமைவதற்குப் பிரதமர் பதவி என்பது ஒரு பொருட்டான விஷயம் அல்ல கூட்டணிக் கட்சித் தலைவர்களே தெரிவித்துள்ளார்கள்.தேர்தலில் எங்கள் கூட்டணி வென்றுவிட்டால், பிரதமர் குறித்து முடிவு செய்யப்படும்.பிரதமர் விஷயத்தை எழுப்புபவர்கள், பாஜகவுக்கு எதிராக வெற்றிபெறக்கூடாது என்ற சிந்தனையில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் தலைமையில் புதுஉத்வேகத்துடன், தீர்மானத்துடன் செயல்பட்டு வருகிறது. கட்சியை வலுப்படுத்த சில தியாங்களும் செய்ய வேண்டி இருந்தது. சில தேர்தல்களில் தோற்றோம், ஆனால், பஞ்சாபில் வெற்றி பெற்றோம், கர்நாடகாவை தக்கவைத்தோம்.

இன்னும் சில மாநிலங்களி்ல பாஜகவுக்குப் போட்டியாக அவர்களைக் காட்டிலும் முன்னோக்கி இருந்தோம். ஆனால், அதிகாரத்தைப் பயன்படுத்தி பாஜக ஆட்சி அமைத்தது. வரும் 5 மாநிலத் தேர்தல் கடந்த 4 ஆண்டுகளாக நாங்கள் செய்த பணியின், உழைப்பின், கடந்து வந்த பாதையின் அளவைத் தீர்மானிக்க உதவும்.

இவ்வாறு சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x