

நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைநகராக விளங்கும் பெங்களூரின் பிரதான சாலைக்கு பிரபல கிராமிய கலைஞர் கரீம் கான் பெயர் இன்று சூட்டப்படுகிறது. இதனை கர்நாடகத்தில் உள்ள கிராமிய கலைஞர்களின் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு பெங்களூர் மாநகராட்சி அவையில் அப்போதைய மேயர் மும்தாஜ் பேகம், ஒரு தனி தீர்மானத்தை முன்வைத்து பேசும்போது, “பெங்களூரில் வரலாற்று காலம் தொட்டு இஸ்லாமியர்கள் வசித்து வருகிறார்கள். மைசூர் சாம்ராஜ்யம், திப்பு சுல்தான், ஹைதர் அலி போன்றவர்களின் ஆட்சிக்காலத்தில் பொற்காலமாக திகழ்ந்திருக்கிறது. ஆனால் இப்போது இஸ்லாமியர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டுவருவது வேதனையாக இருக்கிறது.
அதனைத் தடுக்கும் விதமாக பெங்களூரின் பிரதான சாலையாக கருதப்படும் இந்திராநகர் 100 அடி சாலைக்கு கன்னட கிராமிய கலையை நாடு முழுவதும் கொண்டு சென்ற டாக்டர் கரீம் கான் பெயர் சூட்டப்பட வேண்டும். அதற்கு பெங்களூர் மாநகராட்சியும், கர்நாடக அரசும் ஒத்துழைக்க வேண்டும்” என உருக்கமாக பேசினார். அதனைத் தொடந்து தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
கடந்த எட்டு ஆண்டுகளாக கிடப்பில் இருந்த இந்த தீர்மானத்தை செயல்படுத்தக்கோரி கன்னட சலுவளி கட்சித் தலைவர் வட்டாள் நாகராஜ் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தின. கிராமிய கலைஞர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர்.
தொடர் போராட்டத்தின் காரணமாக, இந்திரா நகர் 100 அடி சாலைக்கு 'டாக்டர் கரீம் கான் பெயர்' சூட்டப்படும் என பெங்களூர் மாநகராட்சி வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு அறிவித்தது. இவ்விழாவில் கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கலந்துகொண்டு பெயர் சூட்ட இருக்கிறார்.
தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைநகராக விளங்கும் பெங்களூரின் பிரதான சாலைக்கு கிராமிய கலைஞர் கரீம் கானின் பெயரை சூட்டுவதற்கு பல்வேறு கிராமிய கலைஞர்களும், இலக்கியவாதிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கர்நாடக கிராமிய கலைஞர்களுக்கான கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில்,”இந்த முயற்சி, கிராமிய கலைக்கும் கலைஞர்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.