Last Updated : 01 Oct, 2018 01:35 PM

 

Published : 01 Oct 2018 01:35 PM
Last Updated : 01 Oct 2018 01:35 PM

தலைமை நீதிபதியாக இன்றே கடைசி: பாட்டு பாடிய வழக்கறிஞர்; உணர்ச்சிவசப்பட்ட தீபக் மிஸ்ரா

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகத் தனது கடைசி வேலை நாளான இன்று, தன்னை மறித்துப் பாட்டுப் பாடிய வழக்கறிஞரிடம் உணர்ச்சிவசப்பட்டார் தீபக் மிஸ்ரா.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் அக்டோபர் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், கடைசி திங்கட்கிழமையான இன்று நீதிமன்றம் வந்த அவரை, வழக்கறிஞர் ஒருவர் வழிமறித்தார்.

1950-களில் வெளியான இந்திப் படப் பாடல் ஒன்றின் ஆரம்ப வரிகளை (தும் ஜியோ ஹஸரோன் சால்....) அவர் பாடினார். பொதுவாக நீண்ட காலம் நலமுடம் வாழ வேண்டும் என்று வாழ்த்தி, பிறந்த நாட்களின்போது இந்தப் பாடல் பாடப்படுகிறது.

பாடியவரை இடைமறித்த மிஸ்ரா, ''இப்போது இதயத்தில் இருந்து பதிலளிக்கிறேன். மாலையில் என் மனதில் இருந்து பேசுவேன்'' என்று தெரிவித்தார். அப்போது சிறிது நேரம் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருந்தார் மிஸ்ரா.

நாட்டின் 45-வது தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ரா 1953-ம் ஆண்டு ஒடிசா மாநிலத்தில் பிறந்தவர். 1977-ம் ஆண்டு ஒடிசா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்து தனது பணியைத் தொடங்கினார்.

1996-ம் ஆண்டு ஒடிசா உயர் நீதிமன்றத்தின் கூடுதல் வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட தீபக் மிஸ்ரா 1997-ம் ஆண்டு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

பல்வேறு மாநிலங்களில் நீதிபதியாகப் பணியாற்றிய மிஸ்ரா, கடந்த 2011-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவியேற்றார். இதைத்தொடர்ந்து 2017-ல் நாட்டின் 45-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். அவரின் பதவிக்காலம் அக்டோபர் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது.

பொதுமக்களுக்கு ஆதார் தேவையா, சபரிமலைக்குப் பெண்கள் செல்லலாமா, திருமணம் தாண்டிய உறவு சரியா, தன்பாலின உறவு குற்றமா உள்ளிட்ட முக்கிய வழக்குகளுக்குத் தன் பதவிக் காலத்தில் தீபக் மிஸ்ரா தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x