

ஒடிஸாவில் பல்வேறு நதிகளில் வெள்ளம் அபாய அளவை கடந்துசெல்லும் நிலையில், தாழ்வான பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் பணிகளை மாநில அரசு புதன்கிழமை தீவிரப் படுத்தியது. மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட் களை அனுப்பி வைத்தது.
இம்மாநிலத்தில் கனமழை, வெள்ளத்துக்கு இதுவரை 23 பேர் பலியாகியுள்ளனர். மாநிலத்தின் பல பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பைதாரணி, மகாநதி ஆகியவற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பெரும் பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் நீடிக்கிறது.
இந்நிலையில் மாநிலத்தில் வெள்ள நிலவரம் குறித்து முதல்வர் நவீன் பட்நாயக் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்த தருணத்தில் மாநிலத்தில் வெள்ள நிலவரம் கட்டுப்பாட்டில் உள்ளது. எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்” என்றார்.
மகாநதியின் நீர்பிடிப்பு பகுதி யில் கனமழை காரணமாக, 630 அடி உயரம் கொண்ட ஹிராகுட் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை 628 அடியை எட்டியது. இதனால் அணையிலிருந்து வெளியேற் றப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்த நீர், பாசனப் பகுதிகளை வியாழக்கிழமை சென்றடைந்து பாதிப்பு ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. மாநிலத்தில் இதுவரை 47 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்பு படையின் 12 குழுக்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் மாநில மீட்புக் குழுவினரும் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்” என்றார்.