Last Updated : 14 Oct, 2018 12:05 PM

 

Published : 14 Oct 2018 12:05 PM
Last Updated : 14 Oct 2018 12:05 PM

‘விரைவில் அறிக்கை வெளியிடுவேன்’: பாலியல் புகாரில் சிக்கிய மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் பேட்டி

ஆப்பிரிக்க நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்த மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர், தன்மீதான பாலியல் புகார்கள் குறித்ததற்கு உரிய விளக்கத்தை வெளியிடுவேன் எனத் தெரிவித்துச் சென்றார்.

மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே. அக்பர் 40 ஆண்டுகளுக்கும் மேலாகபத்திரிகைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பெண்கள் தாங்கள் பாலியல் ரீதியாகச் சீண்டல்களுக்கும்,துன்புறுத்தல்களுக்கும் ஆளானதை # மீடூ ஹேஸ்டேக் மூலம் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு வெளியிட்டுவருகின்றனர்.

அந்தவகையில், மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது இதுவரை பெண் பத்திரிகையாளர்கள் 6 பேர் பாலியல் புகார்களை ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளனர். அதில் அமெரிக்க பத்திரிகையாளர் மஜ்லி டி பு காம்ப், போர்ஸ் பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் கஜாலா வஹாப், மின்ட் லாங்க் ஆசிரியர் பிரியா ரமணி உள்ளிட்ட பலர் குற்றச்சாட்டு கூறினார்கள்.

ஆனால், மத்திய அமைச்சர் அக்பர் ஆப்பிரிக்க நாடுகளில் பயணம் மேற்கொண்டு இருந்ததால் அவரால் இந்தக் குற்றச்சாட்டுக்கு எந்தவிதமான பதிலும், விளக்கமும் அளிக்க முடியவில்லை. மேலும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் இதகுறித்து கேட்டபோது எந்த பதிலும் தெரிவிக்க மறுத்துவிட்டார். மேலும், பாஜக அமைச்சர்களும், முக்கிய பிரமுகர்களும் பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.

அதேசமயம், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா அளித்த பேட்டியில் சமூக வலைதளங்களில் வந்த குற்றச்சாட்டை அப்படியே நம்பிவிட முடியாது. அதன் உண்மைத்தன்மையை ஆராய வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக மத்திய அமைச்சர் அக்பரை விமர்சித்தன. அக்பர் தன்மீதான குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க வேண்டும் இல்லாவிட்டால் பதவியை விட்டு விலக வேண்டும் என்று வலியுறுத்தின. இதனால், மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கும் கடும் நெருக்கடியும், தர்மசங்கடமான நிலையும் ஏற்பட்டது.

இந்நிலையில், ஆப்பிரிக்க நாடுகள் பயணத்தை முடித்துவிட்டு இன்று காலை டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் வந்திறங்கினார்.

அப்போது அக்பரிடம் பெண் பத்திரிகையாளர்கள் ட்விட்டர் தளத்தில் அளித்துள்ள பாலியல் புகார்கள் குறித்த விளக்கம் என்ன என்று கேட்டனர். அதற்குப் பதில் அளித்த மத்திய அமைச்சர் அக்பர், விரைவில், இதற்கு உரியவிளக்கத்தை வெளியிடுவேன் என்று தெரிவித்து அங்கிருந்து சென்றார்.

இதற்கிடையே பெயர் வெளியிட விரும்பாத மத்திய அமைச்சர் ஒருவர் பிடிஐ நிருபரிடம் கூறுகையில், அக்பர் விவகாரத்தில் பாஜக இதுவரை அமைதியாக இருந்தது. ஆனால், அவர் மீதான குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது என்பதைக் கட்சியும், அரசும் கருதுகிறது. மத்திய அமைச்சரின் எதிர்காலம் குறித்த முடிவை பிரதமர்மோடிதான் தீர்மானிப்பார். அக்பர் தன் மீதான குற்றச்சாட்டுக்கு என்னவிதமான விளக்கமும், பதிலும் அளிக்கப்போகிறார் என்பதைக் கட்சியும், அரசும் தீவிரமாக கண்காணித்து வருகின்றன எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x