ஆண்டுக்கு ஒருமுறை திறக்கப்படும் ஹசனம்பா கோயில்; அதிசயத்தைக் காண திரளும் கர்நாடக மக்கள்: கேமிராவுக்கு தடை

ஆண்டுக்கு ஒருமுறை திறக்கப்படும் ஹசனம்பா கோயில்; அதிசயத்தைக் காண திரளும் கர்நாடக மக்கள்: கேமிராவுக்கு தடை
Updated on
2 min read

கர்நாடக மாநிலம், ஹசன் நகரில் இருக்கும் புகழ்பெற்ற, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும் ஹசனம்பா கோயிலைத் தரிசிக்கவும், அங்குள்ள அதியசத்தைக் காணவும் லட்சக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர்.

இந்தக் கோயிலில் நடக்கும் அதிசயத்தை யாரும் வீடியோ, புகைப்படம் எடுக்கக்கூடாது என்ற கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பக்தர்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகிறார்கள், அவர்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்று இடதுசாரி அமைப்புகளும், முற்போக்காளர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், கோயில்நிர்வாகம் இந்த ஆண்டும் கேமிராவுக்கு தடை விதித்துள்ளது.

ஹசன் நகரில் அமைந்துள்ள 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையானது ஹசனம்பா கோயில். ஹோய்சாலர்கள் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கோயில் என்பதால், இங்குச் சிலைகள், கோபுரங்கள் பிரமாண்டமாக இருக்கும்.

இந்த கோயிலின் முக்கியத்துவம் என்னவென்றால், இந்தக் கோயில் நாள்தோறும் திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படாது. இந்தக் கோயில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திருவிழாவின்போது திறக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டு பின்னர் மூடப்படும்.

தீபாவளிக்கு முன்பாக வரும் பவுர்ணமி அன்று கோயில் நடை திறக்கப்படும், ஒருவாரம் நடக்கும் திருவிழா முடிந்தபின் கோயில் நடை மீண்டும் சாத்தப்படும். இந்தக் கோயிலின் சிறப்பு என்னவென்றால், நடை சாத்தப்படும் போதும் இந்தக் கோயிலில் உள்ள அம்மனுக்குப் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு, நெய்விளக்கு ஏற்றப்படும், பின்னர் நெய்வேத்தியம் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தபின் கோயில் நடை சாத்தப்படும்.

ஏறக்குறைய ஒரு ஆண்டுக்குப்பின் மீண்டும் கோயில் நடைதிறக்கப்படும்போது, அம்மன் மீது போடப்பட்ட பூக்கள் வாடாமல், நெய்விளக்கு அணையாமல், இருக்கும். மேலும் நெய்வேத்தியமாக வைக்கப்பட்ட சாதமும் கெட்டுப்போகாமல் இருக்கும். இந்த காட்சியைக் காண நாடுமுழுவதும் ஏராளமான பக்தர்கள் இந்த ஒருவார திருவிழாவுக்கு வருகிறார்கள்.

வரும் நவம்பர் 1-ம் தேதி திறக்கப்படும் கோயில் 9-ம் தேதிவரை திறந்திருக்கும். இந்நிலையில், கோயிலில் நடக்கும் அதிசயத்தைக் காண ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். திருவிழாவுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இப்போதே பக்தர்கள் வரத்தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில், இந்தக் கோயிலில் நடக்கும் அதிசயங்கள் குறித்து பக்தர்களுக்குத் தெரிவிக்க வேண்டும், அதை வெளிப்படுத்த வேண்டும் என்று இடதுசாரி அமைப்புகளும் , முற்போக்காளர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

ஹசன் மாவட்டத்தைச் சேர்ந்த பாரத் ஞான விக்யான் சமிதி(பிஜிவிஎஸ்) அமைப்பு இந்த ஆண்டு பக்தர்கள் கேமிரா, செல்போன் போன்றவற்றை எடுத்துச்சென்று அதியசத்தை படம் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், இதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.

இது குறித்து மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் எச்.டி. ரேவண்ணா தலைமையில் கோயில் திருவிழாவைச் சிறப்பாக நடத்துவது குறித்து மாவட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது அமைச்சர் ரேவண்ணா பேசுகையில், மக்களின் நம்பிக்கையில் எந்த வகையிலும் தலையிடக்கூடாது என்பதால், பத்திரிகையாளர்களும் கோயிலுக்குள் கேமிரா, வீடியோ கொண்டு செல்ல அனுமதியில்லை, கோயிலின் அர்ச்சகர்கள், தந்திரிகளும் கேமிரா, செல்போன் வைத்துக்கொள்ள அனுமதியில்லை.

கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் கவனிக்க வேண்டும், திருவிழா அமைதியாக நடந்து முடிய வேண்டும் என்பதே நோக்கம். பக்தர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் சிறப்பாகச் செய்ய முடிவு செய்துள்ளோம் எனத் தெரிவித்தார்

ஹசன் மாவட்ட பாரத் ஞான விக்யான் சமிதி(பிஜிவிஎஸ்) அமைப்பின் தலைவர் ஹெச்.டி. குருராஜ் கூறுகையில், இந்தக் கோயிலில் நடக்கும் அதிசயங்கள் குறித்து மாவட்டநிர்வாகம் விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in