Last Updated : 26 Oct, 2018 04:43 PM

 

Published : 26 Oct 2018 04:43 PM
Last Updated : 26 Oct 2018 04:43 PM

‘சீஸரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும்’ : சிபிஐ அதிகாரிகள் குறித்து அருண் ஜேட்லி கருத்து

சீஸரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்பதைப் போல், சிபிஐ அமைப்பில் இருக்கும் உயர் அதிகாரிகள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு, நேர்மையாக நடக்க வேண்டும் என்பதில் தவறில்லையே என்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஊழல் புகார் காரணமாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா ஆகியோரை நீக்க மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் அவர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். இதைத் தொடர்ந்து இணை இயக்குநர் எம். நாகேஸ்வர் ராவ் இடைக்கால இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார்.

மேலும், சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவும், தன்னைக் கட்டாய விடுப்பில் மத்திய அரசு அனுப்பியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, ‘‘சிபிஐயின் தற்காலிக இயக்குநர் நாகேஸ்வர் ராவ் நியமிக்கப்பட்ட அக்டோபர் 23-ம் தேதி முதல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் மூடி முத்திரையிடப்பட்ட கவரில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை முக்கியமான கொள்கை முடிவு எதையும் நாகேஸ்வர் ராவ் எடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நாட்டின் உயர்ந்த புலனாய்வு அமைப்பான சிபிஐயில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள் மக்கள் மத்தியில் அதன் நம்பகத்தன்மையை குலைத்துவிட்டன. நியாயம், நேர்மை காக்கப்பட வேண்டும் என்ற நல்லநோக்கில் இயக்குநர், துணை இயக்குநர் ஆகியோர் மீது விசாரணை நடத்த மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டு, விசாரணை முடியும் வரை அவர்கள் பணியில் இருந்து விலகி இருக்கக் கோரியது.

சிபிஐ இயக்குநர் தாக்கல் செய்த மனுவில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்பது, ஏற்றுக்கொள்ளக்கூடிய சாதகமான விளைவுகளை உண்டாக்கக்கூடியது. அரசைப் பொருத்தவரை எந்த ஒரு தனிமனிதருக்கும் எதிராக நடக்க வேண்டிய விருப்பம் இல்லை. சிபிஐ அமைப்பின் மாண்பு, நேர்மை, மக்கள் மத்தியில் அதன் நம்பிக்கை, செயல்பாடு ஆகியன காக்கப்பட வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே இருக்கிறது.

என்னைப் பொருத்தவரை சிபிஐ இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் கட்டாய விடுப்பில் இருப்பது நியாயமானதுதான். ஏனென்றால், ஒருவரின் நடத்தை, ஒழுக்கத்தின் மீதுவிசாரணை நடக்கும் போது அந்த அமைப்பின் தலைவராக எவ்வாறு இருக்க முடியும்? நியாயமாக விசாரணை நடக்க வேண்டியதற்காக அவர்கள் விலகி இருப்பது சரிதான்.எந்த முடிவையும் அரசு எடுக்கவில்லை, மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில்தான் அரசு செயல்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் இன்று நடந்துள்ளதுபடி, இந்த விவகாரத்தில் நியாயம் வெளிப்பட வேண்டும் என்ற விஷயத்தை நீதிமன்றம் வலுப்படுத்தியுள்ளது.2வாரக் காலக்கெடுவுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது, விசாரணையில் உயர்ந்த தரத்தில் நியாயம் கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்துள்ளன. ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் விசாரணையைக் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளதையும் வரவேற்கிறோம்.

இந்த விசாரணையின் மூலம் உண்மை வெளிவரும் என உறுதியாக நம்புகிறோம். நாட்டின் நலனுக்காக உண்மை வெளிப்பட வேண்டும். சீஸரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்பதைப்போல் சிபிஐ உயர் அதிகாரிகள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் உத்தரவு என்பது உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்பதுதான்

இவ்வாறு அருண் ஜேட்லி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x