

முன்னாள் மத்திய அமைச்சர் குமாரி ஷெல்ஜாவின் வீட்டில் திங்கள்கிழமை ஒரு ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான குமாரி ஷெல்ஜாவின் வீடு டெல்லியில் சுனேரி பாக் பகுதியில் உள்ளது. அவரது வீட்டில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக திங்கள்கிழமை காலையில் டெல்லி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் குமாரி ஷெல்ஜாவின் வீட்டுக்கு போலீஸார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி எஸ்.பி.எஸ். தியாகி கூறியதாவது:
சுமார் 40 வயதுடைய ஆண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். முதல்கட்ட விசாரணையில் இறந்து கிடந்தவர், குமாரி ஷெல்ஜாவின் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்ணின் கணவர் என்பது தெரியவந்துள்ளது. சமையல்காரர்களுக்கு இடையில் நடைபெற்ற சண்டையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றார்.