Last Updated : 07 Oct, 2018 01:53 AM

 

Published : 07 Oct 2018 01:53 AM
Last Updated : 07 Oct 2018 01:53 AM

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் ஜின்னா படத்தால் மீண்டும் சர்ச்சை

உத்தரபிரதேச மாநிலம் அலிகரில் சர் சையது அகமது கான் என்பவரால் 1875-ல் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகத்தில் இருக்கும் மவுலானா ஆசாத் மத்திய நூலகத்தில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியன்று தொடங்கிய கண்காட்சியில் மகாத்மா காந்தியுடன் முகம்மது அலி ஜின்னா இருப்பது போன்ற 5 படங்கள் வைக்கப்பட்டிருந்தன. இதற்கு அலிகர் தொகுதி பாஜக எம்.பி. சதிஷ் கவுதம், இந்துத்துவா அமைப்புகள்  எதிர்ப்பு தெரிவித்தன.

இதையடுத்து, அந்தப் படங்கள் அகற்றப்பட்டன. மேலும், அதன் நூலகரான முனைவர் அம்ஜத் அலிக்கு இதுதொடர்பாக விளக்கம் கேட்டு பல்கலை. நிர்வாகம் நோட்டீஸும் அனுப்பியுள்ளது.

காந்தியும், ஜின்னாவும் ஒன்றாக இருக்கும் 10-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் காந்தியின் அருங்காட்சியகத்தில் இன்றும் உள்ளன. அதேபோல், டெல்லியின்தீஸ் ஹசாரி மார்கில் உள்ள காந்தி ஸ்மிருதி உட்பட நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஜின்னாவின் புகைப்

படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அலிகர் முஸ்லிம் பல்கலை.யில் மட்டும் ஜின்னாவின் புகைப்படங்களுக்கு இந்துத்துவாவாதிகள் எதிர்ப்பு தெரிவிப்பதன் பின்னணியில் அரசியல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் அலிகர் பல்கலை வரலாற்றுத்துறையின் பேராசிரியரான இர்பான் ஹபீப் கூறியதாவது:

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் காந்தியுடன் ஜின்னாவுடனான உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, அவர்கள் இருவரும் இடம்பெற்ற புகைப்படங்களை காட்சிக்கு வைத்ததில் தவறில்லை.

சுதந்திரப் போராட்ட காலக்கட்டத்தில், ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்ட ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து மகா சபையினர் இதனை பிரச்சினையாக்குவது வியப்பை அளிக்கிறது என அவர் தெரிவித்தார்.

அலிகர் முஸ்லிம் பல்கலை.யில் ஜின்னா பட விவகாரம் எழுவது இது முதன்முறை அல்ல. அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர் பேரவையில் கவுரவ உறுப்பினராக காந்தி, டாக்டர் ராதாகிருஷ்ணன் போன்ற தலைவர்களை போல் ஜின்னாவும் உள்ளார். இதனால், அப்பேரவையின் அரங்கில் 1938-ம் ஆண்டு முதல் வைக்கப்பட்டுள்ள ஜின்னாவின் படத்தினை அகற்ற வேண்டும் என கடந்த மே மாதம் எதிர்ப்பு கிளம்பியது. தற்போது மீண்டும் ஜின்னா புகைப்படம் வைத்தது சர்ச்சையாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x