Last Updated : 16 Oct, 2018 05:38 PM

 

Published : 16 Oct 2018 05:38 PM
Last Updated : 16 Oct 2018 05:38 PM

தன்மானத்தை இழந்து காங்கிரஸை ஆதரிக்க வேண்டிய அவசியமில்லை: பகுஜன் சமாஜ் முன்னாள் அமைச்சர் மகேஷ் பேட்டி

கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்ற கண்கொத்தி பாம்பாக காத்திருக்கிறது பாஜக. இந்நிலையில் காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில‌ தலைவர் ம‌கேஷ் திடீரென ராஜினாமா செய்திருப்பது குமாரசாமிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மகேஷை சமாதானப்படுத்தும் பணியில் மூத்த அமைச்சர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், பெங்களூருவில் அவரை சந்தித்து, சில கேள்விகளை முன்வைத்தோம்.

யாருமே எதிர்பாராத நிலையில், திடீரென அமைச்சரவையில் இருந்து விலகியது ஏன்?

அமைச்சர் பதவியில் இருப்பதால் கட்சி பணிக்கு போதிய நேரம் ஒதுக்க முடியவில்லை. இன்னும் ஆறு மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பயணித்து கட்சியை வளர்க்க வேண்டும் என நினைத்தேன். பணி நிமித்தமாக நான் பெங்களூருவிலே கொள்ளேகால் மக்களுக்கும் எனக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டதாக உணர்ந்தேன். மகேஷ் ஜெயித்ததும் பெங்களூரு போய்விட்டார் என பேசிய மக்களிடமே, மீண்டும் போய் வேலை செய்யப் போகிறேன். இதைத் தவிர வேறு எந்த காரணமும் இல்லை.

அதிகாரம் நிறைந்த அமைச்சர் பதவியில் இருந்திருந்தால் கர்நாடகாவில் பகுஜன் சமாஜ் கட்சியை வளர்ப்பது எளிதாக இருந்திருக்குமே?

அமைச்சர் பதவியில் இருந்தால் கட்சியை வளர்க்க முடியாது. அதிகார வைத்திருப்பதால் மக்களிடம் நெருங்கி பழகவே முடியவில்லை. என் கட்சி தொண்டர்கள் அழைக்கும் கூட்டங்களுக்கே நேரம் ஒதுக்க முடியவில்லை. இப்படி இருந்தால் கட்சியை எப்படி வளர்க்க முடியும்? எனவே தான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கட்சி பணிக்கு திரும்பி இருக்கிறேன். எனக்கு அமைச்சர் பதவியை விட, கட்சி தொண்டன் பணி தான் முக்கியம். கட்சி பணியை ஆத்மார்த்தமாக செய்தால் ஒரு அமைச்சரை அல்ல, பத்து அமைச்சரை உருவாக்க முடியும்

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் மாயாவதி காங்கிரஸூடன் கூட்டணி அமைக்கவில்லை. இந்நிலையில் கர்நாடகாவில் நீங்கள் காங்கிரஸ் கூட்டணி அரசில் அமைச்சராக இருந்தால் அங்கு தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும். இதனாலே மாயாவதி உங்களை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சொன்னதாக கூறப்படுகிறதே?

இல்லை. நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகே மாயாவதியிடம் பேசினேன். அதற்கு முன்னர் எனது முடிவு குறித்து கர்நாடக மாநில தலைவரிடமும், மேலிட பொறுப்பாளரிடமும் மட்டுமே தகவல் சொன்னேன். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி நாடு முழுவதும் பெரிய வெற்றியை பெற வேண்டும். அதற்காக தொண்டர்கள் அனைவரும் உழைக்க வேண்டும் என மாயாவதி கட்டளையிட்டு இருக்கிறார்.அவரது கட்டளையை மதித்து, அனைத்து நிர்வாகிகளும் முழு மூச்சாக‌ கட்சி பணி ஆற்றி வருகிறார்கள். மாயாவதியை பிரதரமாக்க வேண்டும் என்பதற்காக நானும் தீவிரமாக‌ தேர்தல் பணியில் ஈடுபட போகிறேன்.

கர்நாடக அமைச்சரவையில் இருந்துக் கொண்டே அரசை விமர்சித்து பேசி வந்தீர்கள். இதனால் முதல்வர் குமாரசாமி மற்றும் சில அமைச்சர்கள் உங்களை கடிந்து கொண்டதால், நீங்கள் பதவி விலகியதாக கூறப்படுகிறதே?

காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளோடு எங்களுக்கு சித்தாந்த‌ ரீதியாக முரண்பாடு இருக்கிறது. எனது விமர்சனம் தனிப்பட்ட முரண்பாடு சார்ந்தது அல்ல. முதல்வர் குமாரசாமியும், சக அமைச்சர்களும் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். யார் மீதும் எனக்கு வருத்தம் இல்லை. அமைச்சரவையில் இருந்து விலகினாலும், குமாரசாமி அரசுக்கு ஆதரவு அளிப்பேன். வருகிற இடைத்தேர்தலில் மஜத வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரமும் செய்வேன்.

அண்மையில் காங்கிரஸை சாதி கட்சி என நீங்கள் விமர்சித்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்படியென்றால் மஜத சாதி கட்சி இல்லையா?

நான் காங்கிரஸை மட்டுமல்ல பாஜகவையும் சேர்த்து தான் சாதி கட்சி என விமர்சித்தேன். மஜத மாநில கட்சி என்றால் அதனை அவ்வாறு விமர்சிக்கவில்லை. இந்திய அரசமைப்பு சட்டத்தின் மீது முழு நம்பிக்கை கொண்டு காங்கிரஸூம், பாஜகவும் ஆட்சி செய்திருந்தால் இந்த நாட்டில் சாதிய பாகுபாடு முழுமையாக ஒழிக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த இரு கட்சிகளும் சாதி அமைப்பை கச்சிதமாக காப்பாற்றும் பணியை தான் தொடர்ந்து செய்து வருகின்றன. எனது இந்த விமர்சனத்தில் இருந்து மஜதவையும் விலக்கி பார்க்க முடியாது.

பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் காங்கிரஸூடன் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் எழுந்திருக்கிறது. இந்நிலையில் மாயாவதி மத்திய பிரதேசத்தில் காங்கிரஸூக்கு எதிராக கூட்டணி அமைத்திருப்பது பாஜகவுக்கு சாதகமாக மாறாதா?

மோடி தலைமையிலான பாஜக அரசையும், பாஜகவின் கொள்கைகளையும் காங்கிரஸை விட பகுஜன் சமாஜ் தீவிரமாக எதிர்க்கிறது. மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டின் காரணமாக மாயாவதி தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார். பாஜகவின் மக்கள் விரோத ஆட்சியால் காங்கிரஸை ஆதரிக்கும் மனநிலையில் இருந்தார். இதன் வெளிப்பாடாகவே குமாரசாமி முதல்வராக பதவியேற்ற நிகழ்வில் சோனியா காந்தியுடன் நெருக்கம் காட்டினார். எங்களது நட்பின் வீரியத்தையும், கட்சியின் பலத்தையும் காங்கிரஸ் மதிக்கவில்லை. மிக குறைவான தொகுதிகளை ஒதுக்கியதாலே மாயாவதி காங்கிரஸூடன் கூட்டணி அமைக்கவில்லை. பாஜகவுக்கு சாதகமாகும் என்பதற்காக எங்களின் தன்மானத்தை இழக்க முடியாது. கூட்டணி கட்சிகளை எப்படி மதிக்க வேண்டும் என காங்கிரஸ் கற்றுக்கொள்ள வேண்டும்

கர்நாடகாவில் ஆப்ரேஷன் தாமரை மூலம் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என எடியூரப்பா கூறி வருகிறார். இந்நிலையில் நீங்கள் அமைச்சரவையில் இருந்து விலகி இருப்பது, பாஜக பக்கம் செல்வதற்காகவா?

அஹா..ஹா.. நான் பகுஜன் சமாஜ் கட்சியின் தொண்டன். பாபாசாகேப் அம்பேத்கரின் கொள்கையில் உறுதியான ஈடுபாடு கொண்டவன். அடிமட்டத்தில் மக்களிடையே பணியாற்றி மேலெழுந்து வந்தவன். எக்காரணம் கொண்டும் பாஜக பக்கம் தலைசாய்க்கக் கூட மாட்டேன்.

பாபாசாகேப் அம்பேத்கர் பெயரால் அமைச்சராக உறுதிமொழி எடுத்து கொண்ட நீங்கள், ஒரு மடாதிபதியின் காலணியை எடுத்து தலையில் வைத்துக் கொண்டீர்களே? அந்த வீடியோவை பார்த்த அம்பேத்கரிய செயற்பாட்டாளர்கள் கூட, இத்தகைய மூட நம்பிக்கையை ஒழிக்க வேண்டும் என்றார்களே?

அந்த சம்பவத்துக்காக நான் நிறைய விமர்சனங்களை எதிர்க்கொண்டேன். எனக்கு வாக்களித்து வெற்றிப்பெற வைத்து கொள்ளேகால் மக்களுக்கு நன்றி கூற முதல் முறையாக ஊருக்கு சென்றேன். அப்போது அங்கிருந்த பெரியவரிடம் அங்குள்ள வழக்கப்படி வணங்குமாறு மக்கள் பணித்தார்கள். நீங்கள் சொல்வது போல அவர் கார்ப்பரேட் சாமியாரோ, போலி மடாதிபதியோ அல்ல. இன்னும் சொல்லப் போனால் எனக்காக தேர்தலில் வேலை பார்த்தவர். இருப்பினும் அம்பேத்கரியர்களின் விமர்சனத்தால், அடுத்த முறை அங்கு சென்ற போது அவ்வாறு நான் செய்யவில்லை.

புத்தரையும், பசவண்ணரையும் பின் தொடரும் நான் ஒருபோதும் மூடநம்பிக்கையை நம்ப மாட்டேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x