Last Updated : 31 Oct, 2018 10:25 AM

 

Published : 31 Oct 2018 10:25 AM
Last Updated : 31 Oct 2018 10:25 AM

நக்சல் தாக்குதல்: கணவர் எனத் தெரியாமல் அவர் பலியான செய்தியை தொலைக்காட்சியில் பார்த்த மனைவி

பலியானது தனது கணவர் எனத் தெரியாமலேயே அவர் மீது நடந்த தாக்குதல் செய்தியை தொலைக்காட்சியில் மனைவி பார்த்திருக்கிறார். சத்தீஸ்கரின் நக்சல்வாதிகள் நிகழ்த்திய பயங்கரத் தாக்குதலில் தூர்தர்ஷன் கேமராமேன் பலியானதில் இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு நவம்பர் 12 முதல் இரண்டு கட்டத் தேர்தல் நடைபெறவுள்ளது. நக்சல்வாதிகள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த மாநிலத்தின் தண்டேவாடே மாவட்டத்தில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி செய்திக்குழுவினர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.இவர்கள் பாதுகாப்பிற்கு மத்திய பாதுகாப்பு படையான சிஆர்பிஎப் காவலர்களும் இருந்த நிலையில் அவர்கள் மீது நக்சல் தாக்குதல் நடைபெற்றது. இதில் அப்பகுதி காவல் ஆய்வாளர் ருத்ர பிரதாப், காவலர் மங்களு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், தூர்தர்ஷன் தொலைக்காட்சி கேமராமேன் அச்சுதானந்த் சாஹு (34) பரிதாபமாக பலியானார். இவரது குடும்பத்தினர் மேற்கு டெல்லியின் துவாரகாவில் உள்ள பகவது தோட்டத்தில் வசித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் நடந்த சில நிமிடங்களில் இது தொடர்பான செய்தி இந்தி மற்றும் ஆங்கில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிக் கோண்டிருந்தது.

இதில் பலியானது தன் கணவர் எனத் தெரியாமல் அச்சுதானந்தின் மனைவியான ஹிமான்சலி அந்தச் செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு, அதில் அச்சுதானந்த் பலியான செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்த ஹிமான்சலி கதறி அழுதார்.

இது குறித்து ஹிமான்சலியிடம் துக்கம் விசாரிக்க வந்தவர்களிடம் குடும்ப நண்பர் சுசில் சர்மா கண்ணீருடன் கூறும்போது, ''பலியானவர்கள் யார் என்ற விவரம் இன்றி தாக்குதல் செய்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இதில் தனது கணவரும் பலியாகி இருப்பது தெரியாமல் ஹிமான்சலி அதை ஆர்வத்துடன் பார்த்திருக்கிறார். தொடர்ந்து பலியானவர்களில் அச்சுதானந்த் சாஹுவின் பெயரும் வெளியாகவே டிவியின் முன்பாக கதறி அழத் தொடங்கி விட்டார்'' எனத் தெரிவித்தார்.

சத்தீஸ்கரின் எல்லையில் ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள பொளங்கீர் மாவட்டத்தின் குசுரிமுண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் அச்சுதானந்த் சாஹு. தனது பட்டப்படிப்பிற்கு பின் இந்திய ராணுவத்தில் எழுத்தராகப் பணிக்குச் சேர்ந்தார். பிறகு, ஒடிசாவின் பிஜு பட்நாயக் டிவி இன்ஸ்டியூட்டில் டிப்ளமா பயின்றவர், டெல்லியில் தனது பத்திரிகையாளர் பணியைத் தொடங்கினார். கடந்த 2011-ல் அச்சுதானந்துக்கு டெல்லி தூர்தர்ஷனில் கேமராமேனாக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.

எந்நேரமும் தனது செய்திப் பணியில் மூழ்கி இருப்பவர் அச்சுதானந்த் சாஹு. கையில் கேமரா இல்லாத நேரங்களில் பயன்படும் என ரூ.40,000 விலையில் சத்தீஸ்கர் செல்வதற்கு முன்பாக ஒரு மொபைல் போனை புதிதாக வாங்கியுள்ளார். அவர் டெல்லியில் வாடகை வீட்டில் குடியிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x