Published : 09 Oct 2018 11:26 AM
Last Updated : 09 Oct 2018 11:26 AM

5.3 கிலோ எடையுடன் பிறந்த குழந்தை: மும்பை மருத்துவமனையில் பிரசவம்

மும்பை, கொலாபாவைச் சேர்ந்த 28 வயதுப் பெண்ணுக்கு 5.3 கிலோ எடையுடன் குழந்தை பிறந்துள்ளது.

கடந்த செப்டம்பர் 28-ம் தேதி மும்பையில் உள்ள காமா மருத்துவமனையில் சிசேரியன் முறையில் இந்தப் பிரசவம் நிகழ்ந்துள்ளது. தாயும் சேயும் மருத்துவக் கண்காணிப்பில் நலமுடன் உள்ளனர்.

இந்தியக் குழந்தைகளின் சராசரி எடை 2.5 முதல் 3.5 கிலோ ஆகும். அதிக எடையுடன் குழந்தை பிறக்கும்போது தாய்க்கு சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. பிரசவத்துக்குப் பின் அதிக ரத்த இழப்பு, கடினமான சிசேரியன் முறை, உடலுறுப்புகளுக்கு வலி ஆகியவை ஏற்படலாம்.

இதுகுறித்துப் பேசிய காமா மருத்துவமனை மருத்துவ மேற்பார்வையாளரும், மகப்பேறு மருத்துவருமான ராஜஸ்ரீ கட்கே, ''பொதுவாக நீரிழிவு நோய் உள்ள தாய்களுக்கு அதிக எடை கொண்ட குழந்தைகள் பிறக்கும். ஆனால் இந்தச் சம்பவத்தில் தாய்க்கு நீரிழிவு நோய் இல்லை. தைராய்டு பிரச்சினையும் இல்லை. சிரமங்கள் எதுவும் இல்லாமலே பிரசவம் நடந்தது.

குழந்தையை சில நாட்கள் பிறந்த குழந்தைகளுக்கான ஐசியூவில் வைத்திருந்தோம். தற்போது தாயும் சேயும் வார்டில் நலமாக உள்ளனர். அவர்களைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம்'' என்றார்.

2016-ல் கர்நாடகாவைச் சேர்ந்த 19 வயதுப் பெண்ணுக்கு 6.8 கிலோ எடை கொண்ட குழந்தை பிறந்தது. எல்லோரும் அதிக எடை கொண்ட குழந்தைகள் உடல் நலத்துடன் இருப்பர் என்று நினைக்கலாம். ஆனால் அதை மறுக்கிறார் மகப்பேறு மருத்துவர் துரு ஷா. ''நிஜத்தில் 4 கிலோவுக்கு மேல் பிறந்த குழந்தையின் எடை இருந்தால், அது நமக்கான எச்சரிக்கை மணி. அவர்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதற்கான வாய்ப்புண்டு. அதேபோல் தாய்க்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்து, நோய்த்தொற்று ஏற்படவும் வாய்ப்புண்டு'' என்கிறார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x