Published : 05 Oct 2018 01:47 PM
Last Updated : 05 Oct 2018 01:47 PM

40 வயது சாப்ட்வேர் அதிகாரியிடம் ரூ.13 லட்சத்தைப் பிடுங்கிய டீன் ஏஜ் ஜோதிடர்

வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க தோஷம் கழிப்பதாகக் கூறி 40 வயது சாப்ட்வேர் அதிகாரியிடம் ரூ.13 லட்சத்தைப் பிடுங்கிய டீனேஜ் ஜோதிடர் பஞ்சாப்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் ரச்சகோண்டா இணை காவல் ஆணையர் சுதீர் பாபு கூறியதாவது:

''பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது ஆகாஷ் பார்கவ். இவர் ஜோதிடர் ஆகாஷ் ஷர்மா என்னும் பெயரில் www.specialistastrologer.com என்ற இணையதளத்தை நடத்தி வந்தார்.

ராமந்தபூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகர் என்னும் சாப்ட்வேர் அதிகாரி, திருமண வாழ்க்கையிலும் வேலையிலும் பிரச்சினைகளைச் சந்தித்ததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார்.

வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்ப வழிகளைத் தேடிக்கொண்டிருந்த ஸ்ரீகருக்கு ஆகாஷின் இணையதளம் கண்ணில் பட்டது. அதைத் தொடர்புகொண்ட ஸ்ரீகர், ஆகாஷுடன் பேசத் தொடங்கினார். தன்னுடைய திருமண வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகளை ஆகாஷிடம் சொன்னார் ஸ்ரீகர்.

ஆரம்பத்தில் பூஜை ஒன்றை நடத்த ஆகாஷ் சர்மா ரூ.2000 பணத்தை வாங்கியுள்ளார். அது மெல்ல மெல்ல அதிகரித்து லட்சங்களைத் தொட்டது. மொத்தம் ரூ.13 லட்சம் பணத்தை ஆகாஷிடம் இழந்துள்ளார் ஸ்ரீகர்.

இதுகுறித்து ஸ்ரீகரின் தாய் ஜானகி காவல்துறையில் புகார் அளித்தார். சைபர் க்ரைம் ஆய்வாளர் நரேந்தர் கவுட் தலைமையில் சிறப்புப் படை அமைக்கப்பட்டது. நீடித்த விசாரணையில், ஆகாஷ் ஷர்மா கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் அவர் குற்றம் செய்ததை ஒப்புக் கொண்டார்.''

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x