

வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடுவேன் என்று பிரபல தெலுங்கு நடிகரும், மறைந்த பழம்பெரும் நடிகர் என்.டி. ராமராவின் மகனுமான பாலகிருஷ்ணா கூறினார்.
விசாகப்பட்டினம் அருகே சிம்மாசலம் பகுதியில் உள்ள புகழ்பெற்ற லக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோயிலில் செவ்வாய்க் கிழமை அவர் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்க ளிடம் கூறுகையில், “சமீபத்தில் வெளியான 'லெஜெண்ட்' திரைப் படம் பெரும் வெற்றி பெற்றதால் நேர்த்திக்கடன் செலுத்த இக்கோயிலுக்கு வந்தேன்.
எனது தந்தை முன்பு கேட்டுக் கொண்டபடி தீவிர அரசியலுக்கு வரவுள்ளேன். வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளேன். இது குறித்து கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவிடம் பேசி, விரைவில் அறிவிப்பேன். அதே சமயம் எனது ரசிகர்களுக்காக தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன்” என்றார்.