Last Updated : 17 Aug, 2014 09:09 AM

 

Published : 17 Aug 2014 09:09 AM
Last Updated : 17 Aug 2014 09:09 AM

அப்பாவி மக்கள் கொல்லப்படுவதில் மத்திய அரசு சகிப்புத்தன்மை காட்டாது: போலி என்கவுன்ட்டர் அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்

போலி என்கவுன்ட்டர் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி ஹெக்டே குழு அறிக்கையை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில், ‘போலி என்கவுன்ட்டர் விஷயத்தில் மத்திய அரசு துளியும் சகிப்புத்தன்மை காட்டாது’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் நடந்த தொடர் என்கவுன்ட்டர்கள் போலியாக நடத்தப்பட்டவை என்று கூறி தொண்டு நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

‘கடந்த 30 ஆண்டுகளில் போலி என்கவுன்ட்டர் மூலம் 1,528 பேர் கொல்லப்பட்டதாகவும் இதற்கு காரணமான மத்திய ஆயுதப்படை யினர் மற்றும் போலீஸாரை தண்டிக்க முடியாமல் சிறப்புச் சட்டம் அவர்களை பாதுகாக்கிறது’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

நீதிபதி ஹெக்டே குழு

இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்க நீதிபதி ஹெக்டே குழு நியமிக்கப்பட்டது. இக்குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதன் பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கையை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் மத்திய அரசு கூறியிருப்பதாவது:

மணிப்பூர் மாநிலத்தை நாட்டில் இருந்து பிரிக்க பிரிவினைவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு மத்தியில் ஆயுதப் படையினரும், போலீஸாரும் பணியாற்றி வருகின்றனர். பிரிவினைவாதிகள் ஆள்கடத்தல், மிரட்டல் மற்றும் தவறான வழியில் திரட்டப்பட்ட பணம், வெளிநாட்டில் இருந்து கிடைக்கும் பணம் ஆகியவற்றைக் கொண்டு பிரிவினை பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

போலி என்கவுன்ட்டர் மூலம் அப்பாவி மக்கள் கொல்லப் படுவதில் மத்திய அரசு துளியும் சகிப்புத்தன்மை காட்டாது. அதேநேரம் போலி என்கவுன்ட்டர் குறித்த விசாரணை என்ற பெயரில் நல்ல நோக்கத்துக்காக பணியாற்றி வரும் ஆயுதப்படையினர் மற்றும் போலீஸார் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதை மத்திய அரசு ஏற்காது.

27 அதிகாரிகள் கொலை

பிரிவினைவாதிகள்தான் போலி என்கவுன்ட்டர் என்று பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் அங்கு பணியாற்றும் அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர். கடந்த சில ஆண்டுகளில், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 27 அதிகாரிகள் பிரி வினைவாதிகளால் கொல்லப் பட்டுள்ளனர். ஆயுதப்படையினரை துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்க ‘அப்ஸா’ சிறப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

நீதிபதி ஹெக்டே குழுவின் அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்கிறது. இக்குழு விசாரணை நடத்திய விதமே தவறு. ‘அப்ஸா’ சிறப்புச் சட்டத்தை நீட்டிக்கும்போது, மாநில அரசின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற பரிந்துரையையும் மத்திய அரசு நிராகரிக்கிறது. இந்த வழக்கில் நீதிமன்ற நண்பராக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் மேனகா குருசாமி நடுநிலையாக நடந்து கொள்வதற்குப் பதிலாக புகார் மனுதாரர்களின் வழக்கறிஞர் போல நடந்து கொண்டுள்ளார். ஹெக்டே குழுவின் அறிக்கை தவறானது. சட்டப்படி பொருத் தமற்றது. ஆயுதப் படையினர் மீது விசாரணை நடத்த வழங்கப் பட்டுள்ள பரிந்துரையும் ஏற்கத்தக்க தல்ல. இவ்வாறு மத்திய அரசு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x