Last Updated : 29 Oct, 2018 04:26 PM

 

Published : 29 Oct 2018 04:26 PM
Last Updated : 29 Oct 2018 04:26 PM

அயோத்தி வழக்கு: இந்துக்கள் பொறுமை இழந்துவிட்டார்கள்; தீர்ப்புக்குக் காத்திருக்க முடியாது: அமைச்சர் கிரிராஜ் சிங் ; விஎச்பி கடும் விமர்சனம்

அயோத்தி வழக்கில் தீர்ப்பு தொடர்ந்து தாமதப்பட்டுவருவதால், இந்துக்கள் பொறுமை இழந்துவிட்டார்கள் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கும், தீர்ப்புக்காக இனியும் காத்திருக்க முடியாது என்று விஸ்வ இந்து பரிசத் அமைப்பும் ஆவேசமாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அயோத்தி வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு, அயோத்தி நிலவிவகாரம் தொடர்பான வழக்கை 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல்வாரத்துக்கு ஒத்திவைத்து இன்று உத்தரவிட்டனர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து அறிந்ததும் மத்திய சிறு, குறு, நிறுவனங்கள்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் அதிர்ச்சி அடைந்தார்.

அமைச்சர் கிரிராஜ் சிங் டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், அயோத்தி வழக்கை இந்து-முஸ்லிம் பிரச்சினையாக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துவிட்டது. அயோத்தி வழக்கு தொடர்ந்து தாமதமாகி வருவதால், இந்துக்கள் பொறுமை இழந்துவிட்டார்கள். இந்துக்கள் பொறுமை இழந்துவிட்டால் என்ன நடக்குமோ என்று பயமாக இருக்கிறது என்று சர்சைக்குரிய வகையில் தெரிவித்தார்.

தீர்ப்புக்காக இனியும் காத்திருக்க முடியாது

அயோத்தி வழக்கு 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல்வாரத்துக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அலோக் குமார் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

 

விஎச்பி தலைவர் அலோக் குமார் டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், அயோத்தி வழக்கை மீண்டும் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்து இருக்கிறது. ராமஜென்மபூமி விவகாரத்தில் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கு விசாரணை செல்கிறது. இதற்கு மேல் விஎச்பி அமைப்பு பொறுமை காக்க முடியாது.

ராமர் பிறந்த இடமான அயோத்தியில் விரைவாக ராமர் கோயில் கட்ட வேண்டும். அதற்கு நாடாளுமன்றத்தில் வரும் குளிர்காலக் கூட்டத்தொடரில் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் கேட்டுக்கொள்கிறோம். அரசு இந்தச் சட்டத்தை இயற்றாவிட்டால், சட்டம் இயற்றக்கோரி விஎச்பி அமைப்பு பிரச்சாரம் செய்யும் என அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x