Published : 09 Oct 2018 08:07 AM
Last Updated : 09 Oct 2018 08:07 AM

குஜராத்தில் பிஹார், உ.பி. மக்கள் மீது தாக்குதல்; 20,000 தொழிலாளர்கள் வெளியேறினர்: வன்முறையில் ஈடுபட்ட 450 பேர் கைது

குஜராத்தில் பணியாற்றும் பிஹார், உத்தரபிரதேச தொழிலாளர் களுக்கு எதிராக வன்முறை வெடித்துள்ளது. இதன்காரணமாக 20,000 வெளிமாநில தொழிலாளர் கள் குஜராத்தில் இருந்து வெளி யேறியுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டதாக சுமார் 450 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குஜராத்தின் ஹிம்மத்நகர் அருகேயுள்ள தண்ட்ஹர் கிராமத் தைச் சேர்ந்த 14 மாத குழந்தையை பிஹாரைச் சேர்ந்த தொழிலாளி கடந்த 28-ம் தேதி பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து குஜராத்தில் பணியாற்றும் பிஹார் மற்றும் உத்தரபிரதேச தொழிலாளர் களுக்கு எதிராக வன்முறை வெடித்துள்ளது.

உயிருக்கு அஞ்சி குஜராத்தில் இருந்து வெளிமாநில தொழிலாளர் கள் வெளியேறி வருகின்றனர். தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இதுவரை 450-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

இதுகுறித்து உத்தர் பாரதிய விகாஸ் பரிஷத் தலைவர் மகேஷ் சிங் குஷ்வாஸ் கூறியதாவது: குஜராத்தில் வெளிமாநில தொழி லாளர்கள் மீது மிகக் கடுமையாக தாக்குதல் நடத்தப்படுகிறது. குறிப் பாக குஜராத்தி பேச தெரியா தவர்கள் குறிவைத்து தாக்கப் படுகின்றனர். இதன்காரணமாக உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், பிஹாரைச் சேர்ந்த சுமார் 20,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குஜராத்தை விட்டு வெளியேறி உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் கூறியபோது, "அப்பாவி தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இதை அரசு வேடிக்கை பார்க்கிறது. மும்பையில் நடந்தது தற்போது குஜராத்தில் அரங்கேறுகிறது" என்று தெரிவித்தார்.

இதுகுறித்து மாநில காவல் துறை தலைவர் சிவானந்த் ஜா கூறியபோது, "வன்முறையை கட்டுப்படுத்த மாநில ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 17 கம்பெனிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சுமார் 450-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.

திரும்பி வர அழைப்பு

குஜராத் உள்துறை அமைச்சர் பிரதீப் சிங் ஜடேஜா கூறிய போது,"சமூக வலைதளங்களில் வெளியாகும் வதந்திகளால் வெளி மாநில தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறை பரவி வருகிறது. இதைத் தடுக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம். குஜ ராத்தில் பணியாற்றும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும். மாநிலத்தில் இருந்து வெளியேறிய தொழிலாளர்கள் மீண்டும் திரும்பி வர வேண்டும்" என்று தெரிவித்தார்.

தீர்வு காண முதல்வர்கள் ஆலோசனை

குஜராத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் விவகாரம் தொடர்பாக அந்த மாநில முதல்வர் விஜய் ரூபானியை பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் நேற்று முன்தினம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறைக்கு தீர்வு காண இரு முதல்வர்களும் விரிவாக ஆலோசனை நடத்தினர்.

இதுகுறித்து முதல்வர் நிதிஷ் குமார் பாட்னாவில் நேற்று நிருபர்களிடம் கூறியபோது, "தவறு செய்த தொழிலாளி மீது நடவடிக்கை எடுக்கலாம். அதை விடுத்து ஒட்டுமொத்தமாக பிஹார் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கது. இந்த கருத்தை குஜராத் முதல்வரிடம் வலியுறுத்தினேன். பிஹார் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோரியுள்ளேன்" என்று தெரிவித்தார்.

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கூறியபோது, "குஜராத்தில் சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்படும். யாருக்காவது பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக போலீஸை தொடர்பு கொள்ளலாம். அவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x