Published : 12 Oct 2018 03:35 PM
Last Updated : 12 Oct 2018 03:35 PM

விமானம் சுவரை இடித்ததை தெரியாமலேயே ஓட்டிய விமானி : திருச்சி விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு

திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் , சுற்றுச்சுவர் மற்றும் டவரில் உரசிச் சென்ற விபத்து குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானம் சுவரை இடித்துச் சென்றது விமானிக்கு தெரியாத நிலையில் பின்னர் அவருக்கு தகவல் தரப்பட்டுள்ளது. ஆனால் விமானம் சமூகமாக சென்று கொண்டிருப்பதாக அவர் தகவல் அளித்துள்ளார். இதுபற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

திருச்சியில் இருந்து மும்பை வழியாக துபாய்க்கு 136 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் இன்று அதிகாலை புறப்பட்டது. புறப்பட்ட உடனேயே, விமானம் தொழில்நுட்பகோளாறு காரணமாக குறைந்த உயரத்தில் பறந்தது. இதனால் விமானத்தின் சக்கரங்கள் 5 அடி உயர சுற்றுச்சுவர் மற்றும் அருகே இருந்த வான் கட்டுப்பாட்டு கோபுரத்திலும் விமானம் உரசி சென்றது.

விமானத்தில் பயணித்த 136 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் அந்த விமானம் மும்பையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர் அங்கு விமானம் சோதனை செய்யப்பட்டது. சுவரில் உரசியதால் விமானத்தின் பின் பகுதியில் சிராய்ப்பு மற்றும் சேதம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் அனைவரும் துபாய் செல்ல வேறு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதுறித்து உயர்மட்ட விசாரணை நடத்த விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்துறை அமைச்ச் சுரேஷ் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘இந்த சம்பவம் தொடர்பாக துறையினர் செயலாளர் மற்றும் உயரதிகாரிகளிடம் பேசினேன். விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். ஏர் இந்தியா சார்பில் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பான துணை குழு அமைத்து விசாரிக்குமாறு கூறியுள்ளேன்’’ என தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஏர் இந்தியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ‘‘திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய் விமானம் 1:30 மணிக்கு புறப்பட்டபோது விமான நிலைய சுவர் மற்றும் டவரில் இடித்து உரசிச் சென்றுள்ளது. இதனால் விமானத்தின் அடிப்பகுதியில் சேதம் ஏற்பட்டதை கவனித்த திருச்சி விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக விமானியை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளனர். ஆனால் விமானம் சரியாக போய் கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். பின்னர் காலை 5:30 மணியளவில் மும்பை விமான நிலையத்தில் இறங்கியது. விமானத்தின் வெளி்ப்பகுதியில் ஏற்பட்ட சேதம் குறித்த அதன் பிறகே கவனிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விமானி மற்றும் துணை விமானியிடம் விசாரணை நடத்தப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x