Published : 14 Oct 2018 01:19 PM
Last Updated : 14 Oct 2018 01:19 PM

‘தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு

தமிழகத்தில் என்னால் நீண்ட நாட்களுக்கு வாழ முடியாது, ஆனால் பாகிஸ்தானில் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் வாழ்ந்துவிடுவேன் ஏனென்றால் கலாச்சாரம் பொதுவானது என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள கசாலி நகரில் இலக்கியத்திருவிழா சனிக்கிழமை(நேற்று) நடந்தது. இதில் பஞ்சாப் மாநிலத்தின் சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சரும், காங்கிரஸ் எம்எம்ஏவுமான நவ்ஜோத் சிங் சித்து பங்கேற்றார். அப்போது அவர் தமிழகத்தின் கலாச்சாரத்தையும், பாகிஸ்தானின் பஞ்சாப் கலாச்சாரத்தையும் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையாகி இருக்கிறது. அவர் பேசியதாவது:

நான் தமிழகத்துக்குச் சென்றால், அங்குள்ள தமிழக மக்கள் பேசும் தமிழ்மொழியை என்னால் புரிந்து கொள்ள முடியாது. அந்த மாநில மக்களின் உணவுப்பழக்கமும் எனக்குப் பிடிக்காது. அவ்வாறு அங்குச் சென்றாலும், அங்குள்ள உணவை என்னால் நீண்ட நாட்களுக்குச் சாப்பிடவும் முடியாது. தமிழகத்தில் உள்ள மக்களின் கலாச்சாரம் முற்றிலும் வேறுபட்டது. உணவுப்பழக்கத்தை எடுத்துக்கொண்டால், இட்லி மட்டும் சாப்பிடலாம். ஆனால், தென் இந்திய உணவுகளையும், தமிழக உணவுகளையும் எத்தனை நாட்களுக்குச் சாப்பிட முடியும். என்னால் முடியாது.

தமிழக மக்கள் பேசும் வணக்கம் என்ற வார்த்தையைத் தவிர எனக்கு வேறு வார்த்தைகள் புரியாது. அங்கு என்னால் நீண்ட நாட்கள் வாழ முடியாது.

ஆனால், பாகிஸ்தானுக்கு நான் சென்றால், அங்கு மக்கள் பஞ்சாப் மொழி பேசுகிறார்கள், ஆங்கிலம் பேசுகிறார்கள். அவர்களுடன் என்னால் இயல்பாகப் பேசி வாழ முடியும். பஞ்சாபில் இருக்கும் கலாச்சாரமே, பாகிஸ்தானில் இருக்கிறது. அங்குள்ள மக்களுடன் சேர்ந்து வாழ்வதில் எந்தவிதமான கஷ்டமும் இல்லை. கலாச்சாரமும் ஒரேமாதிரியாகத்தான் இருக்கும். இது மிகவும் வியப்பான விஷயம். இவ்வாறு சித்து பேசினார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவிஏற்பு விழாவுக்குச் சென்ற நவ்ஜோத் சிங் சித்து, அந்நாட்டு ராணுவத் தளபதி குவாமர் ஜாவித் பஜ்வாவை கட்டித்தழுவிய சம்பவம் நம்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழகத்தையும், பாகிஸ்தானையும் ஒப்பிட்டு பேசியுள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

சிரோன்மணி அகாலி தளம் செய்தித்தொடர்பாளர் தல்ஜித் சிங் சீமா கூறுகையில், மாநிலத்தில் அமைச்சராக இருக்கும் சித்து வார்த்தைகளை மிகவும் கவனத்துடன் பேச வேண்டும். யாரையும் புகழ்ந்து பேசுவதில் தவறில்லை. அதற்கு தடையுமில்லை. அதேசமயம், சொந்த நாட்டையும், சொந்த நாட்டில் உள்ள ஒரு மக்களைத் தரம் குறைந்து பேசக்கூடாது எனக் கண்டித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x