Published : 08 Oct 2018 04:21 PM
Last Updated : 08 Oct 2018 04:21 PM

கர்நாடகாவை அச்சுறுத்திய காட்டு யானை ‘ரவுடி ரங்கா’ - பேருந்து மோதி கோர மரணம்

கர்நாடக வனப்பகுதியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி பின்னர் பிடிக்கப்பட்டு வனத்துறையினரால் பழக்கப்படுத்தப்பட்ட யானை ‘ரவுடி ரங்கா’ இன்று அதிகாலை பேருந்து மோதி உயிரிழந்தது.

கர்நாடக மாநிலம் மைசூரு வனப்பகுதியில் காட்டு யானை ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு அச்சுறுத்தி வந்தது. திரைப்படங்களில் வரும் ‘கொம்பன்’ யானையை போலவே மைசூரு வனப்பகுதியில் பலரை மிதித்துக் கொன்ற இந்த யானை பயிர்களையும் சேதப்படுத்தி வந்தது.

இதனால் வனப்பகுதி கிராம மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கிராம மக்கள் சிலரையும், வன அதிகாரிகளையும் இந்த யானை கொடுரமாக கொன்றது. மகாடி வனப்பகுதியை வலம் வந்த இந்த யானைக்கு ‘ரவுடி ரங்கா’ என பெயரிட்டு மைசூர் வனப்பகுதி மக்கள் அழைத்தனர். நீண்ட போராட்டத்துக்கு பின் யானை ‘ரவுடி ரங்கா’ 3 ஆண்டுகளுக்கு முன்பு பிடிக்கப்பட்டது.

சில கும்கி யானைகள் உதவியுடன், ஏராளமான வனத்துறையினரும் ஒன்று சேர்ந்து யானையை பிடித்தனர். பின்னர் மட்டிக்கோடு யானைகள் முகாமுக்கு கொண்டு வரப்பட்ட ‘ரவுடி ரங்கா’வுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வனத்துறைனர் அளித் பயிற்சிக்கு ஏற்ப தனது குணத்தை மாற்றி அந்த யானை பின்னர் கும்கி யானையாக மாறியது.

குறிப்பாக வனப்பகுதியில் அட்டகாசம் செய்யும் யானைகளை அடக்க ‘ரவுடி ரங்கா’ பயன்படுத்தப்பட்டது. கர்நாடக வனப்பகுதியில் காட்டு யானைகள் எங்கு அட்டூழியம் செய்தாலும், அங்கு உடனடியாக ‘ரவுடி ரங்கா’வை அழைத்துச் சென்று காட்டு யானையை அடக்குவதை வனத்துறை வழக்கமாக கொண்டு இருந்தனர்.

இந்தநிலையில் மட்டிக்கோடு யானைகள் முகாமில் இருந்த யானை ‘ரவுடி ரங்கா’ இன்று அதிகாலை உலாத்திக் கொண்டு இருந்தது. அப்போது கேரளாவில் இருந்து மைசூரு செல்லும் நெடுஞ்சாலையை கடக்க முற்பட்ட யானை மீது, தனியார் பேருந்து ஒன்று வேகமாக மோதியது.

இதில் பலத்த காயமடைந்த யானை சிறிது நேரத்தில் உயிரிழந்தது. ‘ரவுடி ரங்கா’ யானை உயிரிழந்த சம்பவம் மைசூரு வனப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த யானை உயிரிழந்த சாலையில் சமீபத்தில் வேறொரு யானையும் உயிரிழந்துள்ளது. அதிகாலை நேரத்தில் வேகமாக வரும் வாகனங்களால் வன உயிரினங்கள் உயிரிழப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x