Last Updated : 25 Oct, 2018 08:28 AM

 

Published : 25 Oct 2018 08:28 AM
Last Updated : 25 Oct 2018 08:28 AM

இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு கட்டாய விடுப்பு; நள்ளிரவில் சிபிஐ தற்காலிக இயக்குநரானார் நாகேஸ்வர் ராவ்: டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் சோதனை; டிஎஸ்பி ஏ.கே.பாசி உட்பட 13 அதிகாரிகள் பணியிட மாற்றம்

சர்ச்சையில் சிக்கிய சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவருக் கும் நள்ளிரவில் கட்டாய விடுப்பு அளிக் கப்பட்டு, தற்காலிக இயக்குநராக எம்.நாகேஸ்வர் ராவ் நியமிக்கப்பட்டார். இதையடுத்து 13 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். நேற்று காலையில் தலைமை அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது.

1984-ம் ஆண்டு குஜராத் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ராகேஷ் அஸ்தானா, கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்தவர். கடந்த 2016 டிசம்பரில் சிபிஐ தற்காலிக இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

கடந்த 2017 ஜனவரியில் சிபிஐ இயக்குநராக அலோக் வர்மா பொறுப் பேற்றார். இவரது எதிர்ப்பை மீறி, 2-ம் இடத்தில் சிறப்பு இயக்குநராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டார். இதையடுத்து, பல்வேறு வழக்குகளில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது.

நிதி மோசடி தொடர்பாக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி மீது சிபிஐ பல்வேறு வழக்குகளை தொடர்ந்துள்ளது. இதை ராகேஷ் அஸ்தானா விசாரித்து வந்தார். இந்த வழக்கிலிருந்து குரேஷியை விடுவிப் பதற்காக அவரிடமிருந்து இடைத்தரகர் மூலம் ராகேஷ் அஸ்தானா ரூ.2 கோடியை லஞ்சமாக பெற்றதாக புகார் எழுந்தது.

இதற்கு பதிலடியாக, அலோக் வர்மா லஞ்சம் வாங்கியதாக மத்திய கண்காணிப்பு ஆணையத்துக்கு (சிவிசி) ராகேஷ் அஸ்தானா ஆகஸ்ட் 24-ம் தேதி புகார் அனுப்பி இருந்தார்.

சிபிஐ வரலாற்றில் அதன் 2 உயர் அதிகாரிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டிருப்பது இதுதான் முதல் முறை. மேலும் அலோக் வர்மா 2 மாதத்தில் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், லஞ்சப் புகார் தொடர்பாக ராகேஷ் அஸ்தானா மற்றும் சிபிஐ டிஎஸ்பி தேவேந்திர குமார் மீது கடந்த 15-ம் தேதி சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதில் தேவேந்திர குமார் 2 தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இதனி டையே, தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யவும் தன்னை கைது செய்ய தடை விதிக்கவும் உத்தரவிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ராகேஷ் அஸ்தானா மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், வரும் 29-ம் தேதி வரை அவரை கைது செய்ய தடை விதித்து வழக்கை தள்ளி வைத்தது.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருந்த நிலையில், அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவருக்கும் கட்டாய விடுப்பு அளித்து நேற்று முன்தினம் நள்ளிரவில் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. மேலும் இணை இயக்குநராக இருந்த நாகேஸ்வர் ராவை தற்காலிக சிபிஐ இயக்குநராக நியமித்து உத்தரவு பிறப் பித்தது. இவர் 1986-ம் ஆண்டு ஒடிசா பிரிவு ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், “புகாரில் சிக்கிய சிபிஐ இயக்குநருக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இடைக் கால ஏற்பாடாக சிபிஐ இணை இயக்குநராக உள்ள எம்.நாகேஸ்வர் ராவ், தற்காலிக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் உடனடி யாக பொறுப்பேற்றுக் கொள்வார். பிரதமர் நரேந்திர மோடி தலைமை யிலான நியமன விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு இதற்கான முடிவை எடுத்துள்ளது” என கூறப் பட்டுள்ளது. மத்திய ஊழல் கண் காணிப்பு ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரி வித்துள்ளது.

இதையடுத்து, இரவோடு இரவாக டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்துக்குச் சென்ற நாகேஸ் வர் ராவ் புதிய இயக்குநராக பொறுப் பேற்றுக் கொண்டார். பின்னர், உடனடி யாக அலோக் வர்மா அலுவலகத்துக்கு சீல் வைக்க உத்தரவிட்டார்.

அடுத்தபடியாக, அலோக் வர்மா வுக்கு நெருக்கமான அதிகாரிகள் மற்றும் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான வழக்கை விசாரித்து வந்த அதிகாரிகள் உட்பட 13 பேரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். அவர் களுக்கு கூடுதல் பொறுப்பும் வழங்கப் பட்டுள்ளது. குறிப்பாக ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த டிஎஸ்பி ஏ.கே.பாசி அந்தமான் போர்ட்பிளேருக்கு மாற்றப்பட்டார். இந்த வழக்கின் கண்காணிப்பாளராக சதிஷ் தாகர் நியமிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து நேற்று காலை யில் அலோக் வர்மா மற்றும் அவ ருக்கு நெருக்கமான அதிகாரிகளின் அறைகளில் சோதனை நடத்தப்பட் டது. மேலும் காலையில் அலுவலகத் துக்கு வந்த அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் தடுத்து நிறுத்தப்பட்டதுடன் அவர்களது கார் ஓட்டுநர்கள் திரும்பப் பெறப்பட்டனர்.

மேலும் சோதனை நடை பெற்ற தால் அலுவலகத்துக்கு வந்த ஊழியர் கள் மதியம் வரை அனுமதிக்கப் படவில்லை. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

சிறப்பு விசாரணைக் குழு

சிபிஐ சிறப்பு இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தானா மீது கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டுள்ளது என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிபிஐ செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “சிறப்பு இயக்குநராக இருந்த அஸ்தானா தனது அதிகாரத்தையும் பொறுப்புகளையும் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து இதை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு பாரபட்சமற்ற முறையிலும், நியாயமாகவும் விசாரணை நடத்தி உண்மைகளை வெளியே கொண்டு வரும். துரித விசாரணை நடத்தப்பட்டு உண்மைகளை வெளியே கொண்டு வர சிறப்பு விசாரணைக் குழு முயற்சிக்கும்” என்றார்.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (சிவிசி) விசார ணைக்கு ஒத்துழைக்காத சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா குறித்து மத்திய அரசு தெரிவித்த கருத்து களுக்கு சிபிஐ செய்தித் தொடர் பாளர் பதிலளிக்க மறுத்து விட்டார்.

மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி அலோக் வர்மா உச்ச நீதி மன்றத்தில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அரசின் இந்த நடவடிக்கையால் முக்கியத்துவம் வாய்ந்த பல வழக்குகளின் விசாரணை பாதிக்கப்படும் என கூறியுள்ளார். இதை அவசரமாக விசாரிக்க வேண்டும் என வர்மா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபால் சங்கநாராயணன் கோரிக்கை வைத்தார். இந்த மனுவை பரிசீலித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, இந்த மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x