

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கணையப் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கோவா மாநில சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ரானே மவுனம் கலைத்தார்.
மனோகர் பாரிக்கருக்கு என்ன நோய் என்பதை மாதக்கணக்கில் ரகசியமாக வைத்திருந்தனர். காங்கிரஸ் கட்சி அக்டோபர் 26ம் தேதி முதல்வர் மனோகர் பாரிக்கர் மாநிலத்தை ஆளும் உடல்தகுதியுடன் இருக்கிறாரா என்பதை 4 நாட்களுக்குள் நிரூபிக்க வேண்டும் என்று ஆளும் பாஜக தலைமை கூட்டணிக்கு காலக்கெடு நிர்ணயித்தது.
இந்நிலையில் இதற்கு மேலும் மறைக்க முடியாது என்ற நிலை ஏற்பட கோவா சுகாதார அமைச்சர் விஷ்வஜித் ரானே, “அவர் கோவா மாநில முதல்வர், அவருக்கு கணையத்தில் புற்று நோய் ஏற்பட்டுள்ளது. இந்த உண்மையை மறைக்க ஒன்றுமில்லை” என்று இன்று அறிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது, “அவர் தன் குடும்பத்துடன் அமைதியாக வாழட்டும், கோவா மக்களுக்காக சேவை செய்த அவர் நிம்மதியாக இருக்கத் தகுதி படைத்தவர்தான். அவர் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிட விரும்பினால் அதை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை. அவர் குடும்பம்தான் அதை தெரிவிக்க வேண்டும், காங்கிரஸ் கட்சி கோர்ட்டுக்குப் போய் பாரிக்கரின் நோயைத் தெரிந்து கொள்ள விரும்பினால் அது அவர்கள் விருப்பம். ” என்றார்.
பாரிக்கர் இந்தியாவிலும் அயல்நாட்டிலும் பல்வேறு மருத்துவமனைகளிலும் கடந்த 7 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவர் இல்லாததால் கோவா ஆட்சியதிகாரத்தில் வெற்றிடம் ஏற்பட்டது.
அக்டோபார் 14ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து பாரிக்கர் வெளியே வந்தது முதல் பொதுவெளியில் முகத்தைக் காட்டவில்லை. தற்போது விட்டில் படுக்கையில்தான் இருக்கிறார். மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள் 24 மணி நேரமும் அவரது அறையில் கடைமையாற்றி வருகின்றனர், என்று செய்திகள் தெரிவிக்கின்றன.