

கல்வி உதவி தொகை பெற தன்னிடம் ஆதார் அட்டை இல்லாததால் மனமுடைந்த ஆறாம் வகுப்பு மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
ஆந்திர மாநில அரசு, அனைத்து அரசு நல உதவி திட்டங்களைப் பெற ஆதார் அட்டை கட்டாயம் என பட்ஜெட் அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து முதியோர், மாற்று திறனாளிகள், விதவைகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், விவசாயிகள், மகளிர் சுய உதவி குழுக்கள் போன்ற அனைத்து தரப்பினருக்கும் தற்போது ஆதார் அட்டை அவசியமாகிறது.
இந்நிலையில், விசாகப்பட்டினம் மாவட்டம், கில்லோகூடா கிராமத்தில் உள்ள அரசு விடுதியில் தங்கி, ஆறாம் வகுப்பு படிக்கும் பாலகிருஷ்ணா (11) எனும் மாணவர், ஆதார் அட்டை இல்லாத காரணத்தால் தொடர்ந்து கல்வி பயில இயலாது எனும் முடிவிற்கு வந்தார்.
இதன் காரணமாக திங்கள்கிழமை காலை தனது அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தும்ரிகூடா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.