Published : 14 Aug 2014 04:59 PM
Last Updated : 14 Aug 2014 04:59 PM

விமானி தூங்கியதால் திடீரென 5000 அடி கீழிறங்கிய ஜெட் ஏர்வேஸ் விமானம்

280 பயணிகளுடன் மும்பையிலிருந்து பிரசல்ஸ் சென்று கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் திடீரென 5000 அடி கீழே இறங்கியது. காரணம் ஒரு பைலட் தூங்கி விட மற்றொரு பைலட் ஐபேடில் சுறுசுறுப்பாக கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். இந்த இரண்டு விமானிகளும் தற்போது பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் மும்பையிலிருந்து புறப்பட்ட இந்த விமானம் துருக்கிய வான்வெளியில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென 5000 அடி தாழ்வாகப் பறந்தது. இதற்குக் காரணம் முக்கிய பைலட் ஒருவர் தூங்கியதும், சக பைலட் ஒருவர் ஐபேடை நோண்டிக்கொண்டிருந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.

280 பயணிகளுடன் சென்ற அந்த விமானம் அதிர்ஷ்டவசமாக விபத்துக்குள்ளாகவில்லை.

இந்த சம்பவம் குறித்து வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த 3 நபர் விசாரணைக் குழு ஆகஸ்ட் 31ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், டிஜிட்டல் ஃபிளைட் டேட்டா ரெக்கார்டரை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஐரோப்பாவிற்குச் செல்லும் போக்குவரத்து அதிகம் உள்ள வான்வழியில் 34,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த இந்த விமானம் விமானிகளின் அலட்சியத்தினால் திடீரென 5000 அடி தாழ்வாகச் சென்று 29,000 அடி உயரத்தில் பறக்கத் தொடங்கியுள்ளது.

உடனே ஆபத்தை உணர்ந்த வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறை விமானிகளுக்கு இதனைத் தெரியப்படுத்தியது.

இரு விமானிகளையும் அழைத்து விசாரணை மேற்கொண்ட போது, தூங்கிய விமானி, விமான வழிநெறிகளின் படி விமானி அறையில் ‘கட்டுப்பாடுடன் கூடிய சிறு உறக்கம்’ மேற்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

மற்றொரு பெண் விமானி, ஐபேடில் விமான ஆவணங்களைத்தான் பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறியுள்ளார். கட்டுப்பாட்டு அறையிலிருந்து எச்சரிக்கப்பட்டதும், ‘கட்டுப்பாட்டுடன் கூடிய ஓய்வு’ எடுத்துக் கொண்ட விமானியை சக விமானி உலுக்கி எழுப்பியுள்ளார். அதன் பிறகே விமானம் மீண்டும் அது செல்ல வேண்டிய உயரத்திற்குச் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் பயணிகளிடையே பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x