Last Updated : 23 Oct, 2018 01:34 PM

 

Published : 23 Oct 2018 01:34 PM
Last Updated : 23 Oct 2018 01:34 PM

‘அமிர்தசரஸ் ரயில் விபத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை நான் தத்தெடுக்கிறேன்’: நவ்ஜோத் சிங் சித்து உறுதி

61 பேர் ரயில் மோதி அமிர்தசரஸ் பலியான சோகத்தில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் அனைத்துக் குழந்தைகளையும் நான் தத்தெடுத்து அவர்களின் கல்வி உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் கவனித்துக்கொள்கிறேன் என்று பஞ்சாப் மாநில அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்தார்.

தசரா விழாவின் கடைசி நாளில் ராவணனை வதம் செய்யும் நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடந்தன. இதன் ஒருபகுதியாக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகருக்கு அருகில் உள்ள ஜோதா பதக் என்ற இடத்தில் ராவண வதம் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது, தண்டவாளத்தில் நின்று நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மீது ரயில் மோதியதில் 61 பேர் அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 80-க் கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த ராவண வதம் நடக்கும் நிகழ்ச்சிக்கு சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் சித்து தலைமை ஏற்றிருந்தார். அவர் நீண்டநேரம் பேசியதால்தான் மக்கள் தண்டவாளத்தில் ராவண வதத்தைப் பார்க்கும் சூழல் ஏற்பட்டது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்நிலையில், இதை அரசியலாக்காதீர்கள் என்று பஞ்சாப் அமைச்சர் நவ் ஜோத்சிங் சித்து கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் விபத்தில் பலியானவர்களின் 21 குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.1.05 கோடி நிவாரணத் தொகை நேற்று வழங்கப்பட்டது.

அப்போது மாநில உள்ளாட்சித்துறை அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து நிருபர்களிடம் கூறுகையில், “காயம் அடைந்தவர்கள் அனைவருக்கும் சிறப்பான சிகிச்சை கிடைக்க தனிப்பட்ட முறையில் நான் உறுதி செய்வேன். அமிர்தசரஸ் ரயில் விபத்தில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகள் அனைவரையும் நானும், எனது மனைவியும் தத்தெடுப்போம்.

எங்களின் சக்திக்கு உட்பட்டு அவர்களின் கல்விச் செலவு, உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் நாங்கள் கவனித்துக்கொள்வோம்.

விபத்தில் கணவனை இழந்த பெண்ணுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும், எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையான உதவிகளையும் செய்வேன். காயம் அடைந்து சிகிச்சை பெறும் இளைஞர்களுக்கு என்னால் முடிந்த வேலைவாய்ப்பையும் பெற்றுத் தருவேன் “ என சித்து தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x