

பாலியல் சீண்டல்களில் ஈடுபட்ட சில சிறுவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த 30 பள்ளி மாணவிகள் மீது தாக்குதல் நடந்த கொடூர சம்பவம் பிஹார் மாநிலத்தில் நடந்துள்ளது.இதில் பல மாணவிகள் ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
பாட்னா நகரிலிருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் சூபால் மாவட்டத்தில் அமைந்துள்ளது தபார்கா கிராமம். இங்குதான் பெண்களுக்கான கஸ்தூர்பாய் காந்தி உண்டு உறைவிடப் பள்ளி இயங்கி வருகிறது.
தபார்காவுக்கு அருகிலுள்ள கிராமம் ஒன்றிலிருந்து ஒரு குழுவாக வந்த சிலர் மாணவிகள் பயிலும் இடத்திற்கே வந்து அவர்களை பாலியல் சீண்டல் செய்ததை எதிர்த்ததால் அவர்களை தாக்கியுள்ளனர்.
சனிக்கிழமை மாலை பள்ளி மைதானத்தில் மாணவிகள் விளையாடிக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்தது. அருகிலுள்ள கிராமத்திலிருந்து சில உள்ளூர் சிறுவர்கள், இளைஞர்கள் சிலர் மாணவிகளிடம் பாலியல் சீண்டல் செய்துள்ளனர். இவர்கள் இப்படி வழக்கமாக செய்வது வழக்கமாம். அதுமட்டுமின்றி பள்ளி மாணவிகளைப் பற்றி தவறான கருத்துக்களை பள்ளி மதில் சுவற்றில் எழுதிவைத்துள்ளனர். இதுபற்றி ஏற்கெனவே பள்ளி நிர்வாகத்திடம் மாணவிகள் புகார் கூறியுள்ளனர்.
சனிக்கிழமை அன்று சுவரில் சில இளைஞர்கள் மோசமான கருத்துக்களை எழுதும்போது சில மாணவிகள் அவர்களைப் பிடித்து நீங்கள் செய்வது தவறு என்று கூறி திட்டியுள்ளனர். அங்கிருந்து தப்பிச் சென்ற சிறுவர்கள் தங்கள் கிராமத்திலிருந்து தங்கள் பெற்றோர் உள்ளிட்டு, 24 பேரை அழைத்துவந்து மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவிகளையும் பள்ளி ஊழியர்களையும் தாக்கியுள்ளனர்.
சம்பவம் பற்றி பள்ளி வார்டன் ரமேதா ராஜ் கூறுகையில் ‘‘'மாணவிகளை உதைத்து, கழிகளைக்கொண்டு அடித்து நொறுக்கினர். இதில் பல பெண்கள் படுகாயமடைந்தனர். அவர்களில் 12 பேர் உடனடியாக ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீஸார் எப்ஐஆர் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை'' இவ்வாறு பள்ளி வார்டன் தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் பைத்யநாத் யாதவ் தெரிவிக்கையில், "பெண்கள் மீதான தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனைவர்மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதற்கிடையில் அத்தொகுதியின் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் ரஞ்சன் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்ட மாணவிகளை பார்த்துள்ளார். மாநில கல்வி அமைச்சர் கிருஷ்ணானந்தன் பிரசாத் வர்மா கூறுகையில், ''இவ்வழக்கிலிருந்து யாரும் தப்ப முடியாது'' என்றார்.
பள்ளி மைதானத்திற்கே சென்று கிராமத்தினர் பெண்களை தாக்குதல் நடத்திய சம்பவம் பீஹாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.