

ராஜஸ்தான், கர்நாடகம், கோவா, மகாராஷ்டிரம் ஆகிய 4 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பிறப்பித்துள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் மாற்றப்பட்டு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
பதவி விலகிய ஆளுநர்கள்
ராஜஸ்தான் ஆளுநராக இருந்த மார்கரெட் ஆல்வா, கர்நாடக ஆளுநராக இருந்த பரத்வாஜ் ஆகியோரின் பதவிக் காலம் அண்மையில் நிறைவடைந்தது.
கோவா ஆளுநராக இருந்த வாஞ்சூவிடம் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு தொடர்பாக கடந்த ஜூலையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். மகாராஷ்டிர ஆளுநர் சங்கரநாராயணன் மிசோரம் மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா செய்தார். இந்த நான்கு மாநில ஆளுநர்களின் பதவியை அண்டை மாநில ஆளுநர்கள் கூடுதலாக கவனித்து வந்த நிலையில் புதிய ஆளுநர்களின் பெயர்களை குடியரசுத் தலைவர் மாளிகை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
ராஜஸ்தான் - கல்யாண் சிங்
அதன்படி உத்தரப் பிரதேச பாஜக மூத்த தலைவர் கல்யாண் சிங் (82) ராஜஸ்தான் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வரான அவர், இரண்டு முறை கட்சியில் இருந்து விலகி மீண்டும் பாஜகவில் இணைந்தவர் ஆவார்.
புதிய பதவி குறித்து கல்யாண் சிங் லக்னோவில் நிருபர்களிடம் கூறியபோது, ராஜஸ்தான் ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கு கட்சித் தலைமைக்கு நன்றி தெரிவித்துக் கொள் கிறேன். அந்த மாநிலத்துக்கு ஆளுநராக அல்ல, சேவகராகச் செல்கிறேன் என்றார்.
கர்நாடகம் - வஜுபாய் வாலா
குஜராத் மாநில பாஜக மூத்த தலைவரான வஜுபாய் வாலா (76) கர்நாடக ஆளுநராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவர் ஆரம்பகாலம் முதலே பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவர். மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் நிதித் துறை அமைச்சர் உள்பட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார். மோடி பிரதமராகப் பொறுப்பேற்றபோது குஜராத் முதல்வர் போட்டியில் வஜுபாய் வாலாவும் இருந்தார். தற்போது அவர் மாநில சட்டமன்ற சபாநாயகராக உள்ளார்.
மகாராஷ்டிரம் - வித்யாசாகர் ராவ்
தெலங்கானா மாநில பாஜகவைச் சேர்ந்த வித்யாசாகர் ராவ் (69), மகாராஷ்டிர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய உள்துறை இணை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசம் கரீம்நகர் தொகுதியில் இருந்து மக்கள வைக்கு 2 முறை தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். வழக்கறிஞரான அவர் 3 முறை ஆந்திர மாநில எம்.எல்.ஏ.வாகவும் பணியாற்றியுள்ளார்.
கோவா - மிருதுளா சின்ஹா
பிஹார் மாநில பாஜக மூத்த தலைவரான மிருதுளா சின்ஹா (71), கோவா மாநில ஆளுநராக பதவியேற்க உள்ளார். மிகச் சிறந்த ஹிந்தி எழுத்தாளரான அவர் 12-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். கட்சியில் தேசிய மகளிர் அணித் தலைவர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். மத்திய சமூகநலத் துறை வாரியத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.