Published : 16 Aug 2014 10:13 AM
Last Updated : 16 Aug 2014 10:13 AM
இந்திய ராணுவம் சார்பில், பாகிஸ்தான், சீன ராணுவ அதிகாரிகளுடன் எல்லைப் பகுதியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
இதுகுறித்து அட்டாரி பகுதியில் உள்ள எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) அதிகாரிகள் கூறியதாவது:
பிஎஸ்எப் ஐஜி (பஞ்சாப் எல்லை) அசோக் குமார், டிஐஜி எம்.எப்.பரூக்கி மற்றும் உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர், அட்டாரி எல்லையில் உள்ள பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளை சந்தித்து, புகழ்பெற்ற இந்திய இனிப்பு வகைகள், பழங்கள் அடங்கிய 8 பரிசுப் பெட்டிகளை வழங்கினர். இதை பாகிஸ்தான் விங் கமாண்டர் ஆஷர் கான் தலைமையிலான அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர் என தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியின்போது, இருதரப்பு வீரர்களும் கைகுலுக்கி மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர். பாகிஸ்தான் சுதந்திர தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை இந்திய ராணுவத்துக்கு அந்நாட்டு ராணுவம் இனிப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
லடாக்கில் சுதந்திர தினம்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் இந்தியா தரப்பில் ராணுவம், இந்தோ-திபெத் எல்லை போலீஸார் (ஐடிபிபி) சீனா தரப்பில் அந்நாட்டு ராணுவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. 4 மணி நேரம் நடைபெற்ற இதில் கலாசார, பொழுதுபோக்கு, விளை யாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்திய சுதந்திர தின விழாவில் சீன ராணுவம் பங்கேற்றதன் மூலம் இருதரப்புக்கும் இடையிலான உறவு வலுவடையும் என மத்திய அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.