Published : 26 Oct 2018 01:27 PM
Last Updated : 26 Oct 2018 01:27 PM

இது எங்கள் பாரம்பரியம்: ஊர் கூடி நடத்தும் திருமணம்; ஒவ்வொருவரும் ஒரு சீர்வரிசைக்கு பொறுப்பு

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள மலைக் கிராம மக்கள் தங்கள் ஊரில் எந்தப் பெண்ணுக்கு திருமணம் நடந்தாலும் அதைச் சேர்ந்து நடத்தி, சீர்வரிசை செய்வதை பகிர்ந்து கொள்கின்றனர். இந்த வழக்கத்தைப் பாரம்பரியமாக செய்து வருகின்றனர்.

ஆங்கிலத்தில் “கிரவுட் ஃபண்டிங்” எனும் வார்த்தைக்கான அர்த்தமாக வாழ்ந்து வருகின்றனர் இந்தக் கிராம மக்கள்.

ஏழை மக்களுக்கு உதவி செய்ய விரும்பும் நிறுவனங்கள் பேஸ்புக், போன்ற சமூக ஊடகங்கள் மூலம் நிதியுதவி பெறுவதே கிரவுட் ஃபண்டிங் எனப்படும். கடந்த சில ஆண்டுகளாகவே இந்த வார்த்தை பிரபலமடைந்து வரும் நிலையில் கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள இந்த ஆதிவாசி மக்கள் இதை காலங்காலமாக செய்து வருகின்றனர்.

ஒரு திருமணத்துக்கு செல்லும் கிராம மக்கள் மொய்ப்பணம் தருவதை இயல்பில் பார்த்திருக்கிறோம். ஆனால், அந்தத் திருமண வீட்டின் ஒட்டுமொத்த செலவையும் அந்தக் கிராம மக்களே ஏற்றுக்கொண்டு காலங்காலமாக செயல்பட்டுவருவது ஒற்றுமையின் வெளிப்பாடாக இருக்கிறது

ஸ்ரீகாகுளம் மாவட்டம், கோத்ரு மண்டலத்தில் உள்ள பாதிகம் மலை கிராமத்தில் வசிக்கும் மக்கள்தான் இந்த பழக்கத்தை பாரம்பரியமாகச் செய்து வருகின்றனர். இந்தப் பழக்கத்தை தங்களின் சமூகத்துக்குள் மட்டும் வைத்து அதை அழியாமல் பாதுகாத்து வருகின்றனர்.

அதன்படி தங்கள் சமூகத்தில் எந்தப் பெண்ணுக்கு திருமணம் நடந்தாலும், அந்தச் சமூக மக்கள் அந்தப்பெண்ணுக்கு தேவையான அனைத்துச் சீர்வரிசைகளையும் வாங்க ஒவ்வொருவரும் செலவை பிரித்துக்கொள்கின்றனர்.

சமீபத்தில் கதிரகா கலாவிதம் என்ற பெண்ணுக்கு திருமணம் நடந்தது. இந்தப் பெண்ணின் திருமணச் செலவு, புதிய வீடு அமைத்துக்கொடுத்தல், சீர்வரிசைப் பொருட்கள் அனைத்தையும் அந்தச் சமூகத்தில் உள்ள மக்களே ஏற்றுக்கொண்டு வாங்கிக்கொடுத்தனர். அந்தப் பெண்ணின் பெற்றோர் எதையும் செய்யத் தேவையில்லை. ஏறக்குறைய 25 குடும்பங்களில் இருந்து மணப்பெண்ணுக்குத் தேவையான பொருட்கள் கிடைத்தன.

இது குறித்து 100-நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் களப் பணியாளர் கதிரா பூதேவி தி இந்துவிடம்(ஆங்கிலம்) கூறுகையில், ‘‘இப்போது எங்கள் சமூகத்தில் 10 பெண்கள் திருமண வயதை அடைந்துவிட்டனர். அனைவருக்கும் எங்களின் பாரம்பரியத்தின்படியே திருமணம் நடைபெறும். எனக்குக் கடந்த 1996-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கடந்த 2012-ம் ஆண்டில் எனது மகள்கள் சாரதா, சின்னம்மிக்கு இதே வழியில்தான் திருமணம் செய்துவைத்தோம். எந்தச் செலவையும் நாங்கள் செய்யவில்லை. எங்கள் சமூகத்தில் உள்ள மக்களே செய்தனர்’’ எனத் தெரிவித்தார்.

பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் கதிரிகா சரோஜினி கூறுகையில், ‘‘எங்கள் சமூகத்தில் ஒரு பெண்ணுக்கு திருணம் நிச்சயம் செய்யப்பட்டவுடன், சமூகத்தில் உள்ள குடும்பத்தினர் ஒவ்வொருவரும் திருமணத்துக்கு தன்னுடைய பரிசு என்ன என்பதைச் சொல்லிவிடுவார்கள். மெத்தை, கட்டில், டி.வி., டிரஸ்ஸில் டேபிள், பாத்திரம், வீடு, சைக்கிள், ரொக்கப்பணம், சாப்பாடு செலவு, மண்டபம் என அனைத்தையும் ஒவ்வொருவரும் பிரித்துக்கொள்வார்கள்’’ எனத் தெரிவித்தார்.

இந்தச் சமூகத்தில் வயதில் மிகவும் மூத்தவரான கதிரிகா சூரியநாரயணா கூறுகையில், ‘‘நாங்கள் பின்பற்றும் இந்த பாரம்பரியத்தைப் பற்றி இப்போது இருக்கும் தலைமுறையினருக்கு எந்த புரிதலும் இல்லை. எப்போது இந்தப் பாரம்பரியம் தொடங்கியது என்றும் தெரியாது. இந்தப் பாரம்பரியம் எங்கள் சமூகத்தில் எப்போது தொடங்கியது என்பது குறித்தும் எங்களுக்குத் தெரியாது. எங்களின் முன்னோர்கள் இதைப் பின்பற்றினார்கள், இதையே நாங்களும் பின்பற்றுகிறோம்.ஒரு திருணம் என்றால், ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு சீர்வரிசையை, செலவைப் பிரித்துக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாகும்’’ எனத் தெரிவித்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான் அழைப்பிற்காக வெயிட்டிங்! - 'சூப்பர் சிங்கர்' செந்தில் கணேஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x