Published : 04 Oct 2018 12:59 PM
Last Updated : 04 Oct 2018 12:59 PM

ராமர்கோவில்; பகவத் பேச்சு மழைக்கால தவளை அழுவது போன்றது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

விரைவில் ராமர்கோவில் கட்டப்படுமென ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளது மழைக்காலத்தில் தவளைகள் அழுது சத்தம்போடுவது போன்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

காங்கிரஸ் தலைமைச் செய்தியாளர் ரன்தீப் சுர்ஜேவாலா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் கலியுக கைகேயியைப் போன்றவர்கள். அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் தேர்தல் வருவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்புதான் ராமர் கடவுள் நினைவுக்கே வருகிறார். அதன்பின் தேர்தல் முடிந்ததும் ராமர் நாடு கடத்தப்பட்டுவிடுவார்.

இது மழையும் தேர்தலும் கலந்த ஒரு காலம் ஆகும். எண்ணற்ற தவளைகள் சத்தம் போடுகின்றன. ஆனால் அத்தகைய சத்தங்கள் எதுவும் உண்மையாக இருக்கவில்லை. ராமர் கடவுள், இந்த நாட்டில் எங்கும் நிறைந்திருக்கிறார்.

சத்யுகத்தில் ஒருமுறை, கைகேயி, கடவுள் ராமரை 14 ஆண்டுகள் காடு கடத்தினாள். தற்போது இன்றைய கலியுகத்திலோ, கைகேயியான பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் 30 வருடங்களாக நாடு கடத்தி வருகிறார்கள்.

தேர்தல் முடிந்த பிறகு ஒவ்வொரு முறையும் அவர்கள் ராமரை நாடு கடத்தி விடுவார்கள். பின்னர் அடுத்த தேர்தல் வரும்போது தவறாமல் நான்கு மாதம் முன்பாகவே அவர் நினைக்கப்படுவார். பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் செயல்படுவது என்னவிதமான குணத்தின் அடிப்படையில்? ராமர்  அவர்களுடைய பேச்சு. ஆனால் அவர்கள் சிந்தனையோ நாதுராம் கோட்சேவினுடையது. இதுதான் பாஜகவின் உண்மைத்தன்மை.

ராம ஜென்மபூமி-பாபர் மசூதி விவகார வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்று காங்கிரஸ் நம்புகிறது, எவ்விதமான தீர்ப்பு யார்பக்கம் வந்தாலும் அதன்படி நடக்க வேண்டும், அரசாங்கம் அதை செயல்படுத்த வேண்டும்.''

இவ்வாறு ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

திங்கள் அன்று நடைபெற்ற பதஞ்சலி யோக பீட விழாவொன்றில் கலந்துகொண்டு பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ''அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை எதிர்க்கும் கட்சிகள் கூட வெளிப்படையாக எதிர்க்க முடியாது, ஏனெனில் ராமர், நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்களின் கண்கண்ட தெய்வம். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆர்.எஸ்.எஸ்., மற்றும் இந்திய ஜனதா கட்சி கடமைப்பட்டுள்ளது. அதேவேளை சில காரணங்களுக்காக தாமதமாகிறது'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x