

இந்துத்துவா கொள்கையை பாரதிய ஜனதா கட்சி அரசியல் அடையாளமாக கொண்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் குற்றம்சாட்டியுள்ளார்.
திருவனந்தபுரத்தில், கல்லூரி மாணவர்கள் மத்தியில் உரையாற்றியபோது சசிதரூர் இதனை தெரிவித்தார்.
அவர் பேசியதாவது: "பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த நாள் முதல் நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் குறிப்பாக உத்திரப்பிரதேசத்திலும் மதக்கலவரங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன.
மதக்கலவரங்கள் அதிகரித்துவருவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி கடந்த சில நாட்களாக எனது கட்சி கோரிக்கை விடுத்துவருகிறது.
அதிகரித்து வரும் மதக்கலவரங்களானது, கடந்த இரண்டு மாத காலத்தில், நரேந்திர மோடி ஆட்சியில் சாமான்ய மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை நன்றாக உணர்த்துகிறது. மதக்கலவரங்கள் குறித்து பிரதமர் மவுனம் சாதிப்பதே இதற்கு சான்று.
பாஜகவில் அனைத்து அதிகாரமும் ஒரு தனிநபர் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்துத்துவா கொள்கையை பாரதிய ஜனதா கட்சி அரசியல் அடையாளமாக கொண்டுள்ளது. இந்துக்களுக்கு மட்டுமே நன்மை செய்ய அக்கட்சி ஆர்வம் காட்டுகிறது. பாஜக மக்களை பிரித்தாள முயல்கிறது.
ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், மோடி அவர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள். அதேவேளையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியை உற்று கவனித்தால் ஒவ்வொரு ஆண்டும் 1% மக்களாவது வறுமையில் இருந்து மீட்கப்பட்டனர் என்ற உண்மை தெரியவரும்" இவ்வாறு சசிதரூர் பேசினார்.