

பெங்களூரில் 6 வயது சிறுவனை கடத்தி ரூ.30 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய கடத்தல்காரர்களை துப்பாக்கியால் சுட்டு போலீஸார் பிடித்துள்ளனர். படுகாயமடைந்த இரு கடத்தல்காரர்களும், மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
பெங்களூரில் உள்ள காட்டன் பேட்டையில் ஆம்னா ராம் என்பவர் ஜவுளிக்கடை வைத்துள்ளார். இவரது மகன் விகேஷ் குமார் (6), அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறான். புதன்கிழமை மாலை 4.30 மணி அளவில் சிறுவனை பள்ளி அருகே இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் கடத்திச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து சிறுவனின் தந்தையான ஆம்னா ராமை தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட மர்மநபர்கள், விகேஷ் குமாரை விடுவிக்க ரூ. 30 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர். மாலை 5.30 மணியளவில் மீண்டும் ஆம்னா ராமை தொடர்புகொண்ட கடத்தல்காரர்கள், 'பணத்தை ஸ்ரீராமபுரத்திற்கு கொண்டு வர வேண்டும்' என கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் போலீஸில் புகார் செய்தனர். இதனைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கிய காட்டன் பேட்டை போலீஸார், மப்டி உடையில் சிறுவனின் பெற்றோருடன், கடத்தல்காரர்கள் கூறிய இடத்திற்குச் சென்றனர்.
பின்னர், மாலை 6.30 மணிக்கு மீண்டும் தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள், 'ராமபுரத்திற்கு வர வேண்டாம்.மல்லேஸ்வரத்தில் உள்ள 'மந்த்ரி' வணிக வளாகத்திற்கு வருமாறு கூறியுள்ளனர். அங்கு சென்ற போது அருகில் உள்ள பூங்காவிற்கு வருமாறு கட்டளையிட்டுள்ளனர். அப்போது அங்கு சென்றபோது சிறுவனுடன் 2 இளைஞர்கள் இருந்தனர்.
அங்கு ஏற்கெனவே மறைந்திருந்த போலீஸார் 2 பேரையும் சுற்றி வளைத்தனர். போலீஸார் மீது கடத்தல்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து கடத்தல்காரர்களின் கால்களில் துப்பாக்கியால் சுட்டு, அவர்களை போலீஸார் பிடித்தனர்.
பலத்த காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் ராஜஸ்தானைச் சேர்ந்த தர்மா ராம் (23), ஜிதேந்திரா (20) என்று போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. கடத்திச் செல்லப்பட்ட சிறுவனை 5 மணி நேரத்தில் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்ததாகவும், இந்த வழக்கில் மேலும் 2 பேரை தேடி வருவதாகவும் பெங்களூர் துணை ஆணையர் லபு ராம் தெரிவித்தார்.