Published : 10 Aug 2018 03:28 PM
Last Updated : 10 Aug 2018 03:28 PM

ராஜீவ் கொலையாளிகளை விடுவிப்பது மோசமான முன்னுதாரணம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளிகளை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவு ஆபத்தான முன்னுதாரணமாகிவிடும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் அறிக்கையை உச்ச நீதிமன்றம் பதிவு செய்து கொண்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குடன், ராஜீவ் குற்றவாளிகளை விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழக அரசும் மனு செய்தது.

இந்த வழக்கை ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. ராஜீவ் காந்தி கொலையாளிகள் ஆயுள் தண்டனை விடுவிப்பு வழக்கில் மத்திய அரசை ஆலோசித்தால் மட்டுமே போதுமானது. மேலும் ஆலோசனை என்ற சொல் மத்திய அரசின் ஒப்புதல் தேவை என்பதாக அர்த்தமாகாது என்று தமிழக அரசு சார்பில் ஏற்கெனவே வாதம் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் வாதம் வைக்கப்பட்டது. கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த் ஆஜராகி வாதிட்டார். அப்போது மத்திய அரசின் சார்பிலான விளக்க அறிக்கையை அவர் தாக்கல் செய்தார். அதில் ‘‘ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்து ஆபத்தான முன்னுதாரணமாகிவிடும். இதை ஏற்க முடியாது.

அவர்களை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு சிபிஐ தரப்பில் ஏற்கெனவே எதிரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் கொலையின்போது,பெண் பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்ட பலர் போலீஸார் இறந்தனர். இந்த வழக்கில் வெளிநாட்டினர் உள்ளிட்டவர்களுக்கும் தொடர்பு இருப்பதை நிருபிக்கப்பட்டுள்ளது. எனவே ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவு ஏற்க்கத்தக்கல்ல. எனவே மற்ற பல வழக்குகளை, இதனுடன் ஒப்பிட முடியாது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு கடந்து வந்த பாதை:

கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை விசாரித்த பூந்தமல்லி தடா நீதிமன்றம் 26 பேருக்கு மரண தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேரின் மரண தண்டனையை உறுதி செய்தது. ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. இதர 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

பின்னர் கடந்த 2000-ம் ஆண்டில் நளினியின் மரண தண்டனையை அப்போதைய தமிழக ஆளுநர் பாத்திமா பீவி மனிதாபிமான அடிப்படையில் ஆயுள் தண்டனையாகக் குறைத்தார். முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பினர். சுமார் 11 ஆண்டுகள் கால தாமதத்துக்குப் பிறகு அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இந்த முடிவை எதிர்த்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர். கடந்த 2014-ம் ஆண்டில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுளாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, ராஜீவ் கொலை வழக்கின் 7 குற்றவாளிகளையும் விடுதலை செய்ய முடிவு எடுத்தது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தொடர்ந்த வழக்கு அரசியல் சாசன அமர்வு முன்பு நிலுவையில் உள்ளது. தமிழக அரசு தாக்கல் செய்த மனுவும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x