

உத்தரபிரதேசத்தில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ தரப்பின் முக்கிய சாட்சியாக விளங்கிய ஒருவர் உயிரிழந்த நிலையில், இதில் சதி இருப்பதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் மாமா சந்தேகம் எழுப்பி உள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் பங்கர்மாவ் தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார். இவர் தன்னை பலாத்காரம் செய்ததாக 17 வயது சிறுமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து, குல்தீப் சிங்கின் ஆதரவாளர்கள், புகாரை திரும்பப் பெறக் கோரி, சிறுமியின் தந்தை பப்பு சிங்கை கடுமையாக தாக்கினர். ஆனாலும் படுகாயமடைந்த பப்பு சிங்கை போலீஸார் கைது செய்தனர். சில நாட்களிலேயே சிறைக்குள் மர்மமான முறையில் பப்பு உயிரிழந்தார்.
இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, எம்எல்ஏ குல்தீப் சிங் உள்ளிட்டோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். பப்புவை தாக்கிய வழக்கில் யூனுஸ் (30) என்பவர் முக்கிய சாட்சியாக இருந்தார். இந்நிலையில் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட யூனுஸ் கடந்த சனிக்கிழமை உயிரிழந்ததாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் யூனுஸ் சாவில் சந்தேகம் இருப்பதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் மாமா கூறியுள்ளார்.
யூனுஸின் உடலை அவசரம் அவசரமாகப் புதைத்தது ஏன்? அவரது உடலுக்கு ஏன் பிரேதப் பரிசோதனை செய்யவில்லை. அவரது குடும்பத்துக்கு கூட தகவல் தெரிவிக்காதது ஏன்? எனவே யூனுஸ் சாவில் மர்மம் உள்ளது என அவர் சந்தேகம் ஏழுப்பி உள்ளார். மேலும் அவரது உடலை மீண்டும் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்கு அனுப்புமாறும் கோரிக்கை வைத்துள்ளார்.
ஆனால் இவரது புகாரை யூனுஸ் குடும்பத்தினர் மறுத்துள்ளனர். அவருக்கு கல்லீரல் நோய் பாதிப்பு இருந்தது என்றும் அதனால்தான் அவர் உயிரிழந்தார் என்றும் தெரிவித்துள்ளனர்.