

13 வருடங்களுக்கு முன் சுட்டுக் கொல்லப்பட்ட பூலான் தேவி கொலை வழக்கில் தீர்ப்பு வந்துவிட்டது. ஆனால், பேமாய் கிராமத்தில் 21 பேரைச் சுட்டுக் கொன்றது தொடர்பாக பூலான்தேவியின் மீதான கொலை வழக்கு இன்னும் முடிந்தபாடில்லை.
இவ்வழக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வரும் 16-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் பள்ளத்தாக்கில் உள்ள பேமாய் கிராமத்தில் 1981-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி மிகப்பெரிய படுகொலை சம்பவம் நடந்தது; 21 பேர் கொல்லப்பட்டனர். இதில், 17 பேர் உயர்சமூகமாகக் கருதப்படும் தாக்கூர் சமூகத்தை சேர்ந்தவர்கள்.
பூலான் தேவி மற்றும் அவரது சகாக்கள் மீது இக்கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் நடந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு மத்தியப் பிரதேச மாநிலத்தில் தன் 10சகாக்களுடன் பூலான்தேவி சரணடைந்தார். ஆனால், அவர் உயிரோடு இருக்கும்வரை ஒருமுறை கூட இவ்வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இது குறித்து தாக்கூர் சமூகத்தின் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் விஜய்நாரயண் சிங் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
பூலான்தேவி சரணடைந்த போது விதித்த நிபந்தனைகளில் பேமாய் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்பதும் ஒன்று. இதனை உத்தரப்பிரதேசத்தின் அப்போதைய முதல்வர் முலாயம் சிங் ஏற்று, பூலான் தேவி மீதான அவ்வழக்கை வாபஸ் பெற்றார். இதை எதிர்த்து நான் உச்ச நீதிமன்றம் சென்று போராடி வெற்றி பெற்றேன்.
இந்த வழக்கில் ஆஜராகலாம் என பூலான் தேவி கருதிய போது அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் மீதம் உள்ள குற்றவாளிகளுக்கு கண்டிப்பாக தண்டணை பெற்றுத் தருவேன்.
இந்த வழக்கில் பூலானுடன் சேர்த்து மொத்தம் 7 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதில், மான்சிங் யாதவ் உட்பட இன்னும் தலைமறைவாக உள்ள மூன்று பேர் மீது ஜாமீன் இல்லாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கைதாகி சிறையில் இருந்த மூவருக்கும் ஜாமீன் கிடைத்து விட்டது. ஒருவருக்கு ஜாமீன் பணம் கட்ட யாரும் இல்லாததால் அவர் இன்னும் சிறையில் இருக்கிறார்.
‘தலைமறைவு குற்றவாளிகளில் முக்கியமானவர் மான்சிங் யாதவ். பூலானில் கொள்ளைக்கார கும்பலில் அவருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவர், தனது சரணுக்கு பின் இப்பகுதி யின் சமாஜ்வாதி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒரு வரானார். முலாயம் சிங்கின் ஆதரவு காரணமாக அவர் இன்னும் கைது செய்யப்படாமல் இருக்கிறார்.
பழிசுமத்த முயற்சி
பேமாய்கிராமத்தில் பூலான் தேவி நடத்திய படுகொலையில் கொல்லப்பட்ட 17 தாக்கூர் குடும்பத்தினருக்கும், குற்றவாளி யாக தண்டிக்கப்பட்டிருக்கும் ஷேர்சிங் ராணாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. பூலான் தேவி, சுட்டுக் கொல்லப்பட்டதற்கு அரசியல் தான் காரணம்.
இவரை கொன்ற ராணா, உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். அங்கு சமாஜ்வாதி கட்சியின் லோகியா பிரிவின் தலைவராக இருந்தார். ராணா, எங்கள் சமூகத்தவர் அல்ல. அவர் மலையை சேர்ந்த தாக்கூர் (பஹாடி தாக்கூர்) என விஜய் நாராயண் கூறினார்.
பேமாய் வழக்கில் சேர்க்கப்பட்ட 33 சாட்சிகளில் எட்டாவது சாட்சி யிடம் வரும் 16-ம் தேதி விசாரணை நடக்கவுள்ளது. சாட்சிகளில் 13 பேர் இறந்து விட்டனர்.