Last Updated : 14 Aug, 2018 09:21 PM

 

Published : 14 Aug 2018 09:21 PM
Last Updated : 14 Aug 2018 09:21 PM

சமூகத்தில் வன்முறைக்கு இடம் இல்லை: 72-வது சுதந்திர தின உரையில் குடியரசுத் தலைவர் மக்களுக்கு அறிவுரை

சர்ச்சைக்குரிய விஷயங்கள், தொடர்பில்லாத,பொருத்தமில்லாத விவாதங்களால் நமது கவனத்தை சிதறவிடக்கூடாது.சமூகத்தில் வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டின் 72-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அவர் தனது உரையில் கூறியிருப்பதாவது:

''மகாத்மா காந்தியின் மந்திரமான அஹிம்சை என்பது, வன்முறையைக் காட்டிலும் மிகவும் வலிமை வாய்ந்தது. நாட்டில் பல்வேறு இடங்களில் அப்பாவிகளை சிலர் கும்பலாகச் சேர்ந்து தாக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. அது தவிர்க்கப்பட வேண்டும். சமூகத்தில் வன்முறைக்கு இடமில்லை.

பெண்கள் அவர்களின் விருப்பப்படி வாழ உரிமை இருக்கிறது. ஆனால் நாட்டில் அவர்களின் தனிப்பட்ட உரிமை, பாதுகாப்பு போன்றவற்றை இன்னும் போதுமான அளவில் அளிக்க வேண்டும். வரலாற்றில் மிகவும் முக்கியமான கட்டத்தில் நாம் இருக்கிறோம்.

பல்வேறு அனுபவங்களைக் கடந்து வந்திருக்கிறோம். நீண்டகாலமாகக் காத்திருக்கும் பல்வேறு இலக்குகளை அடைந்து வருகிறோம். அனைவருக்கும் மின்சாரம், திறந்தவெளி கழிப்பிடம் இல்லாமல் ஆக்குதல், அனைவருக்கும் சொந்த வீடு, ஏழ்மையை விரட்டுதல் போன்றவற்றை அடைந்து வருகிறோம். ஆதலால், சர்ச்சைக்குரிய விஷயங்கள், தேவையில்லாத, தொடர்பில்லாத விவாதங்களால் நாம் கவனத்தை திசைதிருப்பிவிடக்கூடாது.

ஒவ்வொரு இந்தியரும் தங்களுக்கு இருக்கும் கடமை, பொறுப்புணர்வு உணர்ந்து, மதித்து வாழ வேண்டும். அதிலிருந்து நழுவிடக்கூடாது. அதைப் பின்பற்றி வாழ முயற்சிப்போம்.

நாட்டுக்காக ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த பங்களிப்பைச் செய்கிறார்கள். விவசாயிகள் உணவுப் பாதுகாப்புக்குத் தேவையான பங்களிப்பைச் செய்கின்றனர். ராணுவத்தினரும், போலீஸாரும் தீவிரவாதத்திற்கு எதிராகப் போராடி, சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுகிறார்கள். ஒவ்வொரு இந்தியரும் தங்களுடைய பணியை நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் செய்து, சுதந்திரப் போராட்டத்தின் கொள்கையைப் பின்பற்றி வருகிறார்கள்.

நம்முடைய நாட்டின் வளர்ச்சி வேகமெடுத்து, அதன் தோற்றம் மாறி வருவது வரவேற்கத்தக்கது. நம்முடைய நாகரிக பாரம்பரியங்கள் மக்களால், சமூகத்தால், மக்களுக்கும், அரசுக்கும் இடையிலான கூட்டுறவால் வழிநடத்தப்பட்டு வருகிறது.

சமூகத்தில் பெண்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. தாயாக, சகோதரியாக, மகள்களாக நாம் அவர்களைப் பார்க்கிறோம். அவர்களுக்கு உரிய வாழ்க்கையை வாழ அனுமதிக்க வேண்டும், வாய்ப்புகளை வழங்கி, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

சுதந்திர தினம் எப்போதும் நமக்குச் சிறப்பானது. ஆனால், இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறான முக்கியத்துவம் வாய்ந்தது. அடுத்த சில வாரங்களில் அக்டோபர் 2-ம் தேதி மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் வருகிறது. மகாத்மா காந்தி மனிதநேயத்தின் அடையாளமாகத் திகழ்பவர் அவரின் பிறந்தநாளை நாட்டின் அனைத்து இடங்களிலும் நகரங்களிலும் கொண்டாடப்பட்டு, நினைவுகூர வேண்டும். இந்தியாவின் தோற்றமாக, வடிவமாகத் திகழ்பவர் மகாத்மா காந்தி.

கல்வி என்பது சாதாரணமாக ஒருபட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்போ அல்ல. மற்றொருவரின் வாழ்க்கையை நாம் முன்னேற்ற உதவி புரிவதாகும். இதுதான் இந்தியாவின் உணர்வாகும். ஏனென்றால், இந்தியா என்பது மக்களைச் சார்ந்தது, அரசைச் சார்ந்தது அல்ல.''

இவ்வாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x