

சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், அவரது சகோதரர் ராம்கோபால் யாதவ் மற்றும் உபி முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோரை அமர்சிங் செவ்வாய்க்கிழமை சந்தித்தார். அமர்சிங்கை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகக் கருதப்படுகிறது.
இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் அமர்சிங் பேசும்போது, “இது எங்களுக்கு இடையிலான மிகவும் தனிப்பட்ட சந்திப்பு. இதன் மீது எந்த கருத்தையும் நான் சொல்ல விரும்பவில்லை. நான் சகோதரர்போல் பாவிக்கும் ராம்கோபாலுடனும், மகனை போலான அகிலேஷுடனும் கூட சந்திப்பு நடந்தது. இது, சமாஜ்வாதியில் இணைவதற்கான பேச்சுவார்த்தை அல்ல’ என்றார்.
இதற்காக, காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் லக்னோ வந்த அமர்சிங், நேராக முலாயமின் வீட்டிற்கு சென்றார். அங்கு சுமார் 45 நிமிடம் மூடிய கதவுகளுக்குள் பேச்சு வார்த்தை நடந்திருக்கிறது. இந்த சந்திப்பு, அமர் சிங்கை மீண்டும் சமாஜ்வாதியில் சேர்க்க முலாயமின் சகோதரர் எதிர்ப்பு தெரிவித்த இரண்டாவது நாள் நடந்துள்ளது.
தற்போது நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையின் உறுப்பின ராக இருக்கும் அமர்சிங்கின் பதவிக்காலம் இந்த ஆண்டின் இறுதியில் முடிவடைய உள்ளது. இதை மீண்டும் அவர் பெறுவது உறுதியான பின் அமர்சிங் கட்சியில் இணைவது பற்றி முடிவு செய்யப்படும் எனக் கருதப்படுகிறது.
சமாஜ்வாதிக்கு குறைந்து வரும் தொழிலதிபர்கள் ஆதரவை மீண்டும் பெற அமர்சிங் கட்சியில் இணைவது அவசியம் எனவும், இதை அவரது எதிர்ப்பாளர்களான ராம்கோபால் மற்றும் மூத்த உபி அமைச்சரான ஆசம்கான் ஆகியோரிடம் எடுத்துக் கூறி சமாதானம் செய்யப்படுவதாகவும் அரசியல் நிபுணர்கள் தெரிவித் துள்ளனர்.