Published : 22 Aug 2018 07:56 PM
Last Updated : 22 Aug 2018 07:56 PM

துயரத்திலிருந்து மீளா கேரள மக்களுக்கு பீதியைக் கிளப்பிய ஒரு வானிலை முன்னெச்சரிக்கை

கேரளாவை பேய் மழைக் கொட்டித்தீர்த்து பெரிய அளவில் வெள்ளம் ஊர்களையும் கிராமங்களையும் மூழ்கடித்துள்ள நிலையில் மக்கள் மனதில் தீரா சோகமாகவும் அச்சமாகவும் இது பதிவாகிப் போயுள்ளது.

இந்நிலையில் மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் செவ்வாய் இரவு 10 மணிக்கு பலத்தக் காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்க மக்கள் பீதியில் உறைந்தனர்.

ஏன் இப்படி? எதை வைத்து இந்த முன்னெச்சரிக்கை அறிவிப்பு என்று கேள்விகள் எழ, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் இந்தத் தவறான அறிவிப்புக்கு வானிலை மையம்தான் காரணம் என்று தெரிவித்துள்ளது.

அதாவது பல நாட்கள் பழைய வானிலை முன்னெச்சரிக்கையை எடுத்து இப்போது வெளியிட்டு பீதியைக் கிளப்பியுள்ளது, தவறான முன்னெச்சரிக்கை என்றாலும் மக்களுக்கு பீதியைக் கிளப்பியதென்னவோ உண்மை.

இந்த பீதிகிளப்பும் எச்சரிக்கை நேற்று காலை 11 மணியளவில் வெளியாகியுள்ளது. வாட்ஸ் ஆப்பில் மாலைவாக்கில் வைரலாகிப் பரவியுள்ளது.

இது குறித்து வானிலை மைய இயக்குநர் மனோரமா ஆன்லைன் ஊடகத்துக்குக் கூறிய போது, “நாங்கள் வழக்கமான ஒரு அறிவிப்பைத்தான் வெளியிட்டோம். அதாவது மீனவர்கள் கடலுக்குள் செல்வதில் எச்சரிக்கை காக்கவும் என்றும் சில இடங்களில் மழை பெய்யும் என்றும்தான் கூறியிருந்தோம். இந்நிலையில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் ஏன் இத்தகைய செய்தியை வெளியிட்டு மக்களை பதற்றமடையச் செய்தது என்று புரியவில்லை” என்றார்.

கடும் பீதியைக் கிளப்பும் விதமாக 55கிமீ வேகத்தில் காற்று வீசும் பிறகு கனமழை பெய்யும் என்றும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும் என்றும் வெளியிட்டதால் நேற்று இரவு 10 மணிக்கு இந்தச் செய்தி தவறு என்று தெரியும் வரை மக்கள் கடும் பீதியில் இருந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x