Last Updated : 19 Aug, 2018 06:57 PM

 

Published : 19 Aug 2018 06:57 PM
Last Updated : 19 Aug 2018 06:57 PM

கேரள மக்களுக்கு ரூ.25 கோடி நிதியுதவி: முதல்வர் பினராயி விஜயனிடம் தெலங்கானா அமைச்சர் வழங்கினார்

மழைவெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்ட கேரள மக்களின் நிவாரண நிதிக்காக தெலங்கானா மாநிலத்தின் சார்பில் உள்துறை அமைச்சர் ரூ.25 கோடிக்கான காசோலையை முதல்வர் பினராயி விஜயனிடம் இன்று அளித்தார்.

ஏற்கனவே தனது ஒரு மாத ஊதியத்தை நன்கொடையாக கேரள மக்களுக்காக வழங்குவேன் என்று நரசிம்ம ரெட்டி அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் கடந்த 10 நாட்களாக இடைவிடாது பெய்த மழையால் மாநிலத்தின் பெரும்பகுதியான மாவட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதுவரை 350க்கும் மேற்பட்டோர் வெள்ளத்துக்குப் பலியாகி இருக்கிறார்கள், ஏராளமானோரைக் காணவில்லை. 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கேரள மக்களுக்கு உதவ பல்வேறு மாநில அரசுகளும் உதவிக்கரம் நீட்டியுள்ளன. பல்வேறு மாநில அரசுகள் சார்பில் நிதியுதவியும், நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் உணவுப் பொருட்களும், உடைகளும், மருந்துகளையும், அத்தியாவசியப் பொருட்களையும் அனுப்பி உதவி செய்து வருகின்றனர்.

இதில் தெலங்கானா மாநிலத்தின் சார்பில் கேரள மக்களின் நிவாரணத்துக்காக ரூ.25 கோடி அளிக்கப்படும் என்று முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் அறிவித்திருந்தார்.

மேலும், ரூ.2.50 கோடி மதிப்பிலான குடிநீர் சுத்திகரிக்கும் 50 எந்திரங்களை விமானம் மூலம் கேரளாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். கேரளாவில் உள்ள குழந்தைகள் சாப்பிடுவதற்காக ரூ.2 கோடி மதிப்பிலான சத்துணவுகள், பால்பவுடரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,

இந்நிலையில் மாநிலத்தில் உள்துறை அமைச்சராக இருக்கும் என். நரசிம்ம ரெட்டி கேரள மக்களின் நிவாரணத்துக்காக மாநில அரசு அறிவித்திருந்த ரூ.25 கோடியை முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்து இன்று வழங்கினார்.

இதுதவிர தெலங்கான துணை முதல்வர் முகம்மது முகம்முது அலி தனது ஒரு மாத ஊதியத்தையும் கேரள நிவாரண நிதிக்காக அளித்துள்ளார்.

மேலும் தெலங்கானாவில் உள்ள தொழிலதிபர்கள், முக்கிய விஐபிக்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், மக்கள் கேரள மக்களுக்காக நிதியுதவி அளிக்கலாம் அவை முதல்வர் நிவாரண நிதியில் சேர்க்கப்படும் என்று முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.

மேலும், எம்ஐஎம் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான அசாசுதீன் ஓவைசி ரூ.16 லட்சத்தை கேரளத்துக்கு வழங்கியுள்ளார். ரூ.10 லட்சம் மதிப்பிலான மருந்துகளையும் கேரள மக்களுக்காக வாங்கி அனுப்பியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x