Last Updated : 30 Aug, 2018 07:20 PM

 

Published : 30 Aug 2018 07:20 PM
Last Updated : 30 Aug 2018 07:20 PM

மக்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் பணமதிப்பு நீக்கம்: மத்திய அரசு மீது ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு

 பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது ஒட்டுண்ணி முதலாளித்துவத்துக்குத் துணைபோகும் நடவடிக்கை, பெருமுதலாளிகள் கறுப்புப்பணத்தை வெள்ளையாக மாற்றவே கொண்டுவரப்பட்டது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்தியஅரசு மீது குற்றச்சாட்டு சுமத்தினார்.

ஊழல், தீவிரவாதம், கள்ளநோட்டு, கறுப்புப்பணம் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் கடந்த 2016-ம் ஆண்டு, நவம்பர் 8-ம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்தியஅரசு கொண்டு வந்தது. இதன்படி புழக்கத்தில் இருந்த ரூ.15.41 கோடி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. அந்த ரூபாய் நோட்டுகளில் ரூ.3 லட்சம் கோடி கறுப்புப்பணம் வரை வங்கி முறைக்குள் வராது என்று மத்திய அரசு நம்பி இருந்தது.

ஆனால், ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் செல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூபாய்களில் 14.41 லட்சம் கோடியில், 14.31 லட்சம் கோடி வங்கிக்குள் வந்துவிட்டன. ரூ.10,700 கோடி மட்டுமே வரவில்லை என்று தெரிவித்தது. இதன் மூலம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி அடைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது நாட்டில் நடந்த மிகப்பெரிய ஊழல். சாமானிய மக்களிடம் பாக்கெட்டில் இருந்து பணம் எடுக்கப்பட்டு, அரசியல்வாதிகள், அதிகாரிகள் துணையுடன் அரசின் சலுகைகளை சட்டவிரோதமாக அனுபவித்துவரும் பெருமுதலாளிகளிடம் அளிக்கப்பட்டுவிட்டது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட ஆழமான காயங்களான வேலையிழப்பு, பொருளாதார வளர்ச்சி இழப்பு உள்ளிட்டவற்றுக்குப் பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது தவறு அல்ல. அது, வேண்டுமென்றே, திட்டமிட்டே மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும். கார்ப்பரேட் நிறுவனங்கள் உயிர்வாழ்வதற்காகச் சிறு, குறுந்தொழில்கள் அனைத்தும் நசுக்கப்பட்டுவிட்டன.

அரசியல்வாதிகள், அதிகாரிகள் துணையுடன் அரசின் சலுகைகளை சட்டவிரோதமாக அனுபவித்துவரும் 15 முதல் 20 பெருமுதலாளிகள், நண்பர்களுக்காக அவர்களின் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றிக்கொள்ளச் செய்யப்பட்ட நடவடிக்கையாகும். 2016, நவம்பருக்குப் பின் கறுப்புப்பணம் அனைத்தும் வெள்ளையாக மாறிவிட்டது.

உதாரணமாக குஜராத்தில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கியில் அமித் ஷா இயக்குநராக இருக்கிறார். அந்த வங்கியில் ரூ.700 கோடி செல்லாத ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்புக்கு பின் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதை வெறும் வெற்றுவார்த்தை என்று கூடக் கூறமுடியாது, இது மிகப்பெரிய ஊழலாகும்.

உண்மையில், பிரதமர் மோடி சொல்வது சரிதான். கடந்த 70 ஆண்டுகளில் யாரும், எந்த அரசும் செய்யாத செயலைத் தான் அவர் செய்துள்ளார். பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் நாட்டின் பொருளாதாரத்தை சிதைத்து விட்டாரே. இதை 70 ஆண்டுகளில் யாரும் செய்யவில்லையே.

ஏழை மக்களிடம் இருந்து பணத்தை எடுத்து, பிரதமர் மோடி தனக்கு வேண்டிய 15 முதல் 20 பெருமுதலாளிகள் நண்பர்களுக்குக் கொடுத்திருக்கிறார். அதன் அவசியமென்ன.

ரபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு மத்தியஅரசு உத்தரவிடாவிட்டாலும் எங்களுக்குக் கவலையில்லை. ஏனென்றால், இந்த ஊழலில் அனைத்து விவரங்களும் வெளியே கொண்டுவந்துவிட்டோம்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x