Last Updated : 13 Aug, 2018 07:50 AM

 

Published : 13 Aug 2018 07:50 AM
Last Updated : 13 Aug 2018 07:50 AM

பாஜக ‘சீட்’ தராவிட்டாலும் ம.பி. தேர்தலில் போட்டியிட தயாராக இருக்கும் சாதுக்கள்

மத்திய பிரதேசத்தில் நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட சாதுக்கள் பலர் தயாராகி உள்ளனர். பாஜக ‘சீட்’ தராவிட்டால், சுயேச்சை அல்லது காங்கிரஸ் சார்பில் போட்டியிடு வோம் என்று அவர்கள் பகிரங்க மாக அறிவித்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி உள்ளது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் பதவி வகிக்கிறார். இந்த மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிட சாதுக்கள் பலர் தயாராகி விட்டனர்.

ஏனெனில், ம.பி.யில் கடந்த ஏப்ரல் மாதம் 5 சாதுக்களுக்கு இணை அமைச்சர் அந்தஸ்தை முதல்வர் சவுகான் வழங்கினார். அதனால் அரசியலில் குதிக்க சாதுக்கள் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அவர்களில் முக்கியமானவர் சுவாமி நாம்தேவ் தியாகி. இவரை ‘கம்ப்யூட்டர் பாபா’ என்று அழைக்கின்றனர். நர்மதா நதியை சுத்தப்படுத்தும் திட்டத்தின்கீழ் மரக்கன்றுகள் நட்டதில் ஊழல், மணல் கொள்ளை என அரசு மீது இவர் புகார் கூறினார். கடந்த ஏப்ரல் மாதம் அரசைக் கண்டித்து மிகப் பெரிய யாத்திரை ஒன்றை ஏற்பாடு செய்தார்.

ஆனால், தியாகிக்கு இணை அமைச்சர் அந்தஸ்தை முதல்வர் சவுகான் வழங்கினார். அதன்பிறகு போராட்டத்தைக் கைவிட்டார். இந்நிலையில், முதல்வர் சவுகான் கேட்டுக் கொண்டால் வரும் தேர்தலில் போட்டியிடுவேன் என்கிறார் தியாகி. இந்தூர் தொகுதியில் இருந்து போட்டியிட இவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்கின்றனர்.

இதேபோல், துளசிதாசரின் ராமசரிதம் குறித்த ஆய்வில் முனைவர் பட்டம் பெற்ற பாபா அவ்தேஷ்புரி (47), உஜ்ஜைனி மாவட்டத்தின் ஏதாவது ஒரு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட விரும்புகிறார். ஆனால், பாஜக.வை நிர்hdபந்திக்க மாட்டேன். சீட் தராவிட்டால் சுயேச்சையாகப் போட்டியிடுவேன் என்கிறார்.

இதேபோல் மகராஜ் மதன் மோகன் கதேஸ்வரி (45), சியோனி மாவட்டத்தில் உள்ள கியோலரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட விரும்புகிறார்.

யோகி ரவிநாத் மகிவாலே (42), ரெய்சென் மாவட்டத்தில் ஏற்கெனவே பிரச்சாரத்தைத் தொடங்கி விட்டார். “வருவது வரட்டும். தேர்தலில் போட்டியிடுவேன். பாஜக சீட் தராவிட்டால், காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதில் எனக்கு அந்த ஆட்சேபனையும் இல்லை’’ என்று கூறி வருகிறார்.

மகந்த் பிரதாப் கிரி (35), ரெய்சென் தொகுதியில் போட்டி யிட விரும்புகிறார். பாஜக சீட் தராவிட்டால் சுயேச்சையாக போட்டியிடுவேன் என்று இவரும் கூறுகிறார்.

இதனால் வரும் தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வின் போது பாஜக.வுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x