

இன்று காலை குவைத்திலிருந்து ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த குவைத் விமானம் தரையிறங்கும்போது தீப்பிடித்தது. இதில் 150க்கும் அதிகமான பயணிகளும் விமான ஊழியர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இது தொடர்பாக விமான நிலைய உயரதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
''விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய பின், நிறுத்தப்படும் இடத்தை நெருங்குவதற்குமுன் சில நிமிடங்களுக்குள் தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக, விமானத்தின் வலது பக்க இன்ஜினில் தீப்பிடித்தது.
விமானம் அதிகாலை 1.33க்கு தரையிறங்கியது. 1.36க்கு இன்ஜினில் தீப்பிடித்ததை விமான ஊழியர்கள் கண்டுபிடித்தனர். விமான நிலையத்தின் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீப்பிழம்புகளை அணைத்தனர்.
விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் விமான கேப்டனிடம் விமான என்ஜினை நிறுத்த அறிவுறுத்தினர். அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.''
இவ்வாறு விமான நிலைய உயரதிகாரி தெரிவித்தார்.