Last Updated : 18 Aug, 2018 03:27 PM

 

Published : 18 Aug 2018 03:27 PM
Last Updated : 18 Aug 2018 03:27 PM

கேரள மக்களின் போராட்டக் குணத்துக்கு தலை வணங்குகிறேன்: மோடி பெருமிதம்

 மழைக்கும், வெள்ளத்துக்கும் எதிராக மீண்டு வரும் கேரள மக்களின் போராட்டக் குணத்துக்கு தலை வணங்குகிறேன் என்று பிரதமர் மோடி பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார்.

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மாநிலத்தில் பெருமழை கொட்டித் தீர்த்து வருகிறது. ஏறக்குறைய 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து வருகிறது.

மழையின் கோரத் தாண்டவத்துக்கும், வெள்ளத்துக்கும், நிலச்சரிவுக்கும் இதுவரை 320-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர், ஏராளமானோரைக் காணவில்லை.

2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். இவர்கள் அரசு ஏற்பாடு செய்துள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களும், தனியார் அமைப்புகளும் கேரள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

இந்நிலையில், கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை பிரதமர் மோடி, தனி ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். அவருடன் முதல்வர் பினராயி விஜயன், நிதி அமைச்சர் தாமஸ் ஐசக், ஆளுநர் பி. சதாசிவம் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

அதன்பின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு இடைக்கால நிவாரணமாக உடனடியாக ரூ.500 கோடி ஒதுக்குவதாக அறிவித்தார். அதன்பின் ட்விட்டரில் பிரதமர் மோடி கேரள மக்கள் குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

''கேரள மாநிலத்தில் பெய்த பெருமழை, அதனால் ஏற்பட்ட மழையில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். இதில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவிக்கிறேன்.

கேரள மாநிலத்துக்கு அனைத்து விதமான உதவிகளையும் மத்திய அரசு வழங்கும். நிதி உதவி, உணவு தானியம், மருந்துகள் ஆகியவற்றைத் தேவைக்கு ஏற்றார்போல் வழங்கும். மேலும், தேசிய நெடுஞ்சாலை, என்டிபிசி, பிஜிசிஐஎல் ஆகியவை மூலம் அடிப்படை வசதிகளைச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம், பல்வேறு சமூகத் திட்டங்கள் ஆகியவற்றில் பயனடைந்து வரும் மக்களுக்கு விரைவாக நிதியுதவி கிடைக்க உதவி செய்யப்படும்.

தேசிய பேரிடர் மீட்புப் படையினர், துணை ராணுவப் படையினர், விமானப்படை, கடற்படை, கடலோரப் பாதுகாப்புப் படையினர் ஆகியோர் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளம், மழை பாதிப்புகளை எதிர்த்துப் போராடி வரும் கேரள மக்களின் போராட்டக் குணத்துக்கு தலைவணங்குகிறேன். இதுபோன்ற நெருக்கடியான சூழலில் மக்களும், அதிகாரிகளும் இணைந்து செயல்படுவதைப் பாராட்டுகிறேன். இதுபோன்ற இக்கட்டான சூழலில் நாடு முழுவதும் கேரள மாநிலத்தை நோக்கி உதவிகள் குவிந்து வருவதை நினைத்துப் பெருமைப்படுகிறேன்''.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x