Published : 31 Aug 2018 12:42 PM
Last Updated : 31 Aug 2018 12:42 PM

கேரளாவில் எலிக்காய்ச்சலுக்கு ஒருவர் பலி: வெள்ளத்தை தொடர்ந்து அச்சுறுத்தும் பீதி

கேரளாவில் வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் அங்கு தற்போது தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எலிக்காய்சலுக்கு ஒருவர் பலியாகியுள்ளதை அம்மாநில சுகாதாரத்துறை உறுதிபடுத்தியுள்ளது.

கேரளாவில் அண்மையில் பெய்த வரலாறு காணாத மழையினால், அம்மாநிலம் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் 12 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மழை, வெள்ளம் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவுகளால் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. பல ஆயிரம் கிலோமீட்டர் சாலைகள் சேதமடைந்திருக்கின்றன. 200-க்கும் மேற்பட்ட பாலங்கள் இடிந்துள்ளன. இதுதவிர, கன மழைக்கு அம்மாநிலத்தில் 476 பேர் பலியாகியுள்ளனர்.

தொற்று நோய் பாதிப்பு

நிவாரண முகாம்களில் சுமார் 9 லட்சம் தங்க வைக்கப்பட்டனர். வெள்ளம் வடிந்த சூழலில் மக்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். மீட்பு பணிகள் முடிந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. மக்கள் வீடுகளை சுத்தம் செய்து தங்கள் வழக்கமான பணிகளுக்கு திரும்பத் தொடடங்கியுள்ளனர். இந்நிலையில் அங்கு தற்போது தொற்று நோய்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன.

கோட்டயம் மாவட்டம் கடநாடு பகுதியைச் சேர்ந்த பி.வி. ஜார்ஜ் (வயது 62) என்பவர் எலிக் காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். கடந்த சில தினங்களாக கடும் காய்ச்சல் இருந்தநிலையில் அவர் மரணமடைந்துள்ளார். அவரது உடல் உறுப்புகளை சோதனை செய்ததில் எலிக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்துள்ளது.

அவர் எலிக்காய்ச்சலால் உயிரிழந்ததை கேரள மாநில சுகாதாரத்துறையும் உறுதிபடுத்தியுள்ளது. இதுபோலவே ஆலப்புழா மாவட்டம் சிங்கோலியைச் சேர்ந்த சியாம்குமார் (வயது 33) என்பவர் மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இந்தநிலையில் அவரும் கடும் காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

அவர் மரணத்துக்கு எலிக்காய்ச்சல் தொற்று காரணமா என ஆய்வு நடைபெற்று வருகிறது. மேலும் ஆலப்புழா மாவட்டம் நெடுமுடி சங்கரமங்கலத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர் எஸ்.வி. சிபு என்பவரும் உயிரிழந்துள்ளார். அவருக்கும் எலிக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதா என ஆய்வு நடைபெறுகிறது. தொற்று நோயால் அடுத்து மரணங்கள் நடந்து வருவதால் மருத்துவத்துறை உஷார் நிலையில் இருக்கும்படி மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x