Last Updated : 14 Aug, 2018 03:55 PM

 

Published : 14 Aug 2018 03:55 PM
Last Updated : 14 Aug 2018 03:55 PM

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிரபுத்தரி பூஜை நாளை நடைபெறும்: தேவதாஸ்தானம் அறிவிப்பு

புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை நடக்கும் ஆண்டு நிரபுத்தரி பூஜை வழக்கம் போல் எந்தவிதமான தடையும் இன்றி நடைபெறும் என்று திருவாங்கூர் தேவஸ்தானம் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

அதேசமயம், பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், பக்தர்கள் ஆபத்தான முயற்சிகளில் ஈடுபட்டு கோயிலுக்கு வர வேண்டாம் என்றும் தேவஸ்தானம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பத்திணம்திட்டா மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஓணம் பண்டிகைக்கு முன் அறுவடையைக் கொண்டாடும், நிரபுத்தரி பூஜை நடத்தப்படும்.

ஆனால், தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து, கேரளாவில் மழை கொட்டி வருகிறது. இதனால், 22 அணைகள் முழுக் கொள்ளளவை எட்டியதால் திறக்கப்பட்டுள்ளன. 11 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகள், உடைமைகளை இழந்து அரசின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கடும் வெள்ளம், தொடர் மழை காரணமாக, சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டு தோறும் நடக்கும் நிரபுத்தரி பூஜை இந்த ஆண்டு நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. பெருமழை காரணமாக, ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தை கேரள அரசு ரத்து செய்துவிட்டநிலையில், பூஜை நடக்குமா என்பது தெரியாமல் இருந்தது.

இந்நிலையில் திருவாங்கூர் தேவஸ்தான வாரியம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், சபரிமலை ஐயப்பயன் கோயிலில் நாளை வழக்கம் போது நிரபுத்தரி பூஜை நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருவாங்கூர் தேவஸ்தான வாரியத்தின் தலைவர் ஏ. பத்மக்குமார் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மேல்சாந்தி(தலைமை குரு) கோயிலுக்குள்தான் இருக்கிறார். கேரளாவில் புதிதாக அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் இன்று மாலை ஐயப்பயன் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படும்.

பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், மிகவும் பாதுகாப்பான முறையில் இரு குழுக்கள் மூலம் நெல்மூடைகள் சபரிமலைக்குக் கொண்டு செல்லப்படும். ஒரு குழு வண்டிப்பெரியாரில் இருந்து வனப்பகுதி வழியாக நெல்மூடைகளை கொண்டு வருவார்கள். மற்றொரு குழு வழக்கமான பம்பை வழியாக நெல்மூடைகளை கொண்டு வருவார்கள்.

திட்டமிட்டபடி நிரபுத்தரி பூஜைக்காக இன்று மாலை நல்ல நேரத்தில் கோயில் நடை திறக்கப்படும். நாளை நடக்கும் ஆண்டு நிரப்புத்தரி பூஜைக்கு எந்தவிதமான தடையும் இல்லை. வழக்கம் போல் நாளைக் காலை நிரபுத்தரி பூஜை நடைபெறும்.

பம்பை ஆற்றில் இன்னும் வெள்ள நீரின் அளவு குறையவில்லை. இப்போதுள்ள சூழலில் பக்தர்கள் யாரும் கோயிலுக்கு வராமல் இருப்பது பாதுகாப்பானதாகும். இதைத்தான் தேவஸ்தானம் சார்பிலும் அறிவுறுத்துகிறோம்.

கோயிலில் பூஜைகள் நடத்தும் தலைமைத் தந்திரி வழக்கம்போல் உரிய நேரத்துக்கு நாளை கோயிலுக்கு வந்துவிடுவார். அச்சன்கோயில் அருகே அனைத்து நெல்மூடைகளும் வைக்கப்பட்டு மலையில் மீது ஏற்றத் தயாராக உள்ளன. இவ்வாறு ஏ. பத்மக்குமார் தெரிவித்தார்

ஆவணி மாதம் முதல் 5 நாட்களில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைதிறக்கப்படும் என்பதால், தரிசனத்துக்குப் பக்தர்கள் அதிக அளவு வருவார்கள்.

அதுமட்டுமல்லாமல், நிரபுத்தரி பூஜை எனச் சொல்லப்படும் அறுவடையை கொண்டுடாம் பூஜையைக் காணவும் அதிக அளவு பக்தர்கள் வருவார்கள். ஆனால், தொடர் மழை, பம்பை ஆற்றில் வெள்ளம் காரணமாக, பக்தர்களுக்கு இந்த ஆண்டு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

பம்பையில் உள்ள திரிவேணி பாலத்தை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஓடுவதால், பக்தர்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சபரிமலையில் உள்ள சபரிகிரி நீர்மின்சார நிலையப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது, மேலும், பம்பா, அனத்தோடு அணைகளிலும் இருந்து நீர் வெளியேற்றப்படுவதால், பம்பை ஆற்றில் வெள்ள நீர் அபாய அளவைத் தாண்டி செல்கிறது. மேலும், பத்திணம்திட்டாவில் உள்ள மூழியாறு, காக்கி அணைகளும் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x