Last Updated : 02 Aug, 2018 11:59 AM

 

Published : 02 Aug 2018 11:59 AM
Last Updated : 02 Aug 2018 11:59 AM

165 அடி ஆழ்துளைக் குழாய் கிணற்றில் விழுந்த குழந்தை; 30 மணிநேர போராட்டத்துக்குப் பிறகு உயிருடன் மீட்பு: நிதிஷ்குமார் பாராட்டு

165 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் குழாய் கிணற்றில் விழுந்த 30 மணிநேர நீண்ட போராட்டத்திற்குப் பிறகு உயிருடன் மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் பிஹார் மாநிலம் முங்கேர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

நேற்று அதிகாலை 4 மணி அளவில் சன்னோ என்ற 3 வயது பெண் குழந்தை மிகவும் குறுகலான ஆழ்துளைக் குழாய்க்குள் விழுந்துவிட்டது. 45 அடி ஆழத்தில் போய் சிக்கிக்கொண்டது. ஆனால் அந்த ஆழ்துளைக் குழாயின் நீள ஆழம் 165 அடி ஆகும்.

இதுகுறித்து முங்கேர் காவல் கண்காணிப்பாளர் கவுரங் மங்களா செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், ''முங்கேர் நகரின் முர்கியாச்சக் பகுதியில் உள்ள தனது தாய் வழி தாத்தா பாட்டி வீட்டுக்கு குழந்தை சன்னோ வந்திருந்தது. நேற்று அதிகாலை விளையாடிக் கொண்டிருந்தபோது அருகிலிருந்து புதியதாக போடப்பட்டு மூடப்படாமல் இருந்த ஆழ்துளைக் குழாய் கிணற்றில் போய் விழுந்துவிட்டது.

அக்குழந்தையின் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் அந்த இடத்திற்கு சற்று தொலைவிலிருந்து இதைப் பார்த்துள்ளனர். அவர்கள் அதிர்ச்சியடைந்து சத்தம் எழுப்பியுள்ளனர். காவல்நிலையத்திற்கு தகவல் வந்த உடனே, பின்னர் தேவையான உதவிக்குழுக்கள் வரவழைக்கப்பட்டன.

கிட்டத்தட்ட 30 மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு இன்று காலை 9.45 மணியளவில் இக்குழந்தை உயிருடன் மீட்டுடெடுக்கப்பட்டுள்ளது. அதன் உடல் முழுவதும் சேறு ஒட்டியுள்ளது.

இக்குழந்தையை, குழந்தையின் பெற்றோர் நாச்சிகேதா சாவோ மற்றும் சுதா தேவி ஆகியோர் சதார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றுள்ளனர்.

காவல் ஆணையர் பங்கஜ் குமார் பால் மற்றும் காவல்துறை தலைவர் ஜிஜேந்திர மிஸ்ரா ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்திருந்தனர்.

இத்தகைய சம்பவத்தால் மனச்சோர்வுக்கு ஆளான பெற்றோரை ஆறுதல்படுத்திய உள்ளூர் மக்கள், உள்ளூர் நிர்வாகத்தைப் பாராட்டி கோஷங்கள் எழுப்பினர்.

சன்னோவை இடைவிடாமல் போராடி உயிருடன் மீட்டெடுத்த ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படையினர் அனைவரும், உள்ளூர் மக்கள் மற்றும் மாநில உயரதிகாரிகளின் பாராட்டுதலைப் பெற்றனர்'' என்று கவுரவ் மங்களா தெரிவித்தார்.

பிஹார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் குழந்தையை உயிருடன் மீட்டவர்களுக்கு தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x