

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். அதிகாரிகளுக்கான நடத்தை விதிகளில் மத்திய அரசு முக்கிய திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதன்படி அதிகாரிகள் தங்கள் பணியின்போது அரசியல் சார்பின்மையை கண்டிப்புடன் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அகில இந்திய ஆட்சிப் பணிகள் (நடத்தை) திருத்த விதிகள் 2014-ஐ மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ளது. அரசுப் பணிகளின்போது தனிநபரிடம் இருந்தோ, நிறுவனங்களிடம் இருந்தோ ஆதாயம் பெறக்கூடாது. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. தனக்காகவோ, குடும்பத்துக்காகவோ, நண்பர்களுக்காகவோ சாதகமாகச் செயல்படக்கூடாது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் தங்கள் பணியின் போது அரசியல் சார்பின்மையை கண்டிப்புடன் கடைப்பிடிக்க வேண்டும், அந்நிய நாடுகளுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்பன உள்ளிட்ட நடத்தை விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.